சென்னை – திரைப்படங்களில் ஏடாகூடமாகப் பேசி வம்பில் சிக்கிக் கொள்ளும் வைகைப் புயல் வடிவேலு, நிஜ வாழ்விலும் அதனை தவறாமல் கடை பிடித்து வருகிறார். அவரின் வார்த்தை ஜாலங்கள் அவரை எந்த சூழலில் உந்தித் தள்ளியது என்பது பெரிதாக விளக்கிச் சொல்லத் தேவையில்லை.
விஜயகாந்த்துடனான தனிப்பட்ட பிரச்சனையை அரசியலாக்கிய வடிவேலுவிற்கு அதுவே மிகப் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்நிலையில் நடிகர் சங்க விவகாரத்தில் வடிவேலு மீண்டும் வாய்திறந்து தனக்கான பிரச்சனையை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்துள்ளார். அவரது படங்களில் வருமே ‘போங்க பாஸு..நாங்க அடிவாங்காத எடமே கெடையாது’ என்று, அது போல பிரச்சனையை வலிய சென்று இழுத்துக் கொண்டுள்ளார். இம்முறை அவர் வம்பிழுத்து இருப்பது ‘நாட்டாமை’ சரத்குமாரிடமும், ‘அம்பலத்தான்’ ராதாரவியிடமும் தான்.
விஷாலின் பாண்டவர் அணிக்கு ஆதரவாக பேசுவதற்கு வந்து, சரத்குமாரையும், ராதாரவியையும் தனது பாணியில் மனிதர் விளாசித்தள்ளிவிட்டார். பார்வையாளர்கள் மட்டுமல்ல மேடையில் அமர்ந்து இருந்தவர்களும் அவரது பேச்சை வெகுவாக ரசித்துக் கேட்டனர். அவர் விடைபெற்ற பின் கைதட்டல் விண்ணைப் பிளந்தது.
ஆனாலும் அந்த சத்தம் வடிவேலுவிற்கான எச்சரிக்கை மணியாகவும் இருக்கும் என பொது பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நடிகர் சங்க விவகாரத்தில் தலையிடுவதற்கும், தனக்கு பிடித்தவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கும் வடிவேலுவிற்கு முழு உரிமையும் உண்டு என்றாலும், அவரை விட அனுபவத்திலும், வயதிலும், அவரை விட ஆக்ரோசமாகவும் பேசும் திறன் கொண்ட சத்யராஜே, இந்த விவகாரத்தில் நடுநிலையாகவும் பக்குவமாகவும் பேசி இருக்கும் போது, வடிவேலுவும் அவரை பின்பற்றி இருக்கலாமே என்று தோன்றுகிறது.
சரி வடிவேலுவின் பேச்சு அப்படியே காற்றில் பறந்துவிடும் என்றாலும் பரவாயில்லை. சமூக ஊடகங்கள் மிகத் துல்லியமாக உள்ள இந்த காலகட்டத்தில் அவரின் தற்போதய பேச்சு தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் எதிர்பார்த்தபடியே சரத்குமார் தரப்பும் வடிவேலு மீது கடும் கோபத்தில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் வடிவேலு அடுத்தடுத்து சந்திக்க இருக்கும் பிரச்சனை என்னவாக இருக்கப்போகுதோ என்ற பதற்றம் அவரை விட நமக்குத் தான் அதிகம் ஏற்படுகிறது.
கடந்த சில வருடங்களாக வடிவேலு இடம்பெறாத தமிழ் சினிமாவின் நகைச்சுவையில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது நிதர்சனமான உண்மை. இதனை வடிவேலு உணர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.