சென்னை – நடிகர் சங்கத் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் விஷால், ஊர் ஊராகச் சென்று தான் ஊழல் செய்து விட்டதாக கூறிவருவதாகக் கூறி நடிகர் சரத்குமார் இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விஷால் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் சரத்குமார் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு வெகு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகின்றது. எதிர்வரும் அக்டோபர் 18-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் அதில் பல பிரச்சனைகள் உருவாகி வருகின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால், ”சரத்குமார் தொடர்ந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். சரத்குமார் மீதான புகாருக்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன” என்று கூறியுள்ளார்.
விஷால் அணியை ராதிகாவும், சிம்பும் தாக்க, சரத் அணியை வடிவேலு உட்பட பலரும் தாக்கிப் பேசி வருகின்றனர். இந்நிலையில், இப்பிரச்சனைக்கு சமாதானம் பேச வந்த தயாரிப்பாளர் சங்கத்திலும் பிரச்சனைகள் உருவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
போகிற போக்கைப் பார்த்தால், நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் மெல்ல சரத்குமார், விஷால் இடையிலான தனிப்பட்ட விவகாரமாகத் திசை மாறுகின்றது.
இதனால், எதிர்வரும் அக்டோபர் 18-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்விக் குறி எழுந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.