சென்னை – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. காலை வேளையில் கடற்கரைக் காற்று இதமாக இருக்கும். சரி.. காலார நடந்து காற்று வாங்கிவிட்டு வரலாம் என்று நினைத்தால், அங்கு சென்று நமது காரை பார்க்கிங்கில் நிறுத்துவது தொடங்கி, குடிநீர் வாங்குவது வரை எல்லாவற்றிலும் உள்ள சிக்கல்களை எண்ணிப் பார்க்கும் போது வீட்டிலேயே இருந்துவிடலாம் என்று தோன்றுவது வழக்கம்.
ஒரு காலை வேளையில், வாகன இரைச்சல் இல்லாத சென்னை கடற்கரையில், மெல்லிசையை ரசித்த படி, யோகா, உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற விசயங்களை செய்து ரசிக்க விரும்புபவர்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) அதற்கு உகந்த நாளாக அமையவுள்ளது.
சென்னையிலுள்ள மெரீனா கடற்கரையைப் போலவே, எலியட்ஸ் கடற்கரையும் மிகவும் அழகானது. பல தமிழ்த் திரைப்படங்களில் இந்த கடற்கரையைப் பார்த்து வருகின்றோம். இவ்வளவு அழகான கடற்கரையில் எப்போதும் வாகன நெரிசல், சத்தம் போன்றவை ஏற்படுவது வாடிக்கை.
இந்தப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண, சென்னை மாநகராட்சி ‘நம்ம சென்னை நமக்கே’ என்ற நிகழ்ச்சியை அக்டோபர் 11-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
கார்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமை என்ற நிகழ்ச்சியை அமெரிக்காவைச் சேர்ந்த போக்குவரத்து மற்றும் வளர்ச்சி கொள்கை நிறுவனம் (ஐடிடிபி) நடத்தி வருவது போல், சென்னையில் நடத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஐடிடிபி ஆகியவை இணைந்து நடத்த உள்ளன.
இது குறித்து ஐடிடிபி நிறுவனத்தின் ‘நம்ம சென்னை நமக்கே’ திட்ட மேலாளர் அஸ்வதி திலீப் ‘தி இந்து’ விடம் கூறியிருப்பதாவது:-
“சென்னையில் காலி இடம் என்பதே குறைந்துவிட்டது. சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால், சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. நமது பாரம்பரிய வாழ்க்கை முறையை மீட்டெடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கார்கள் இல்லாத ஞாயிற்றுக்கிழமை என்ற கருப்பொருளுடன் ‘நம்ம சென்னை நமக்கே’ என்ற நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த இருக்கிறோம்.”
“அக்டோபரில் இந்நிகழ்ச்சி தொடங்க உள்ளது. ஒரு கிலோ மீட்டர் நீள சாலை தேர்வு செய்யப் பட்டு, அங்கு போக்குவரத்து போலீஸார் உதவியுடன் மோட்டார் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படும். சாலையில் பொதுமக்கள் குழந்தைகளுடன் விளையாடலாம். நடை பயணம், சைக்கிள் பயணம் போகலாம். யோகா செய்யலாம். இதன்மூலம் மக்களின் உடல் இயக்கம் பெற்று ஆரோக்கியம் ஏற்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுக்கு வருபவர்கள் கார்களைத் தவிர்த்து, சைக்கிளிலோ, பொதுப் போக்குவரத்துகளிலோ பயணம் செய்து கடற்கரையை அடையும் படியும், தேவையான தண்ணீர் குடுவைகளை எடுத்துக் கொண்டு வரும் படியும் ஏற்பாட்டுக் குழுவினரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அதே வேளையில், அங்கு வருபவர்கள் குப்பைகளை முறைப்படி குப்பைத் தொட்டியில் போட்டு, அவ்விடத்தை குப்பைகள் இல்லாத இடமாக வைக்க உதவும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இது போன்ற நல்ல திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து பயனடையும் பட்சத்தில், இன்னும் இது போன்ற புதுமையான திட்டங்கள் செயல்படுத்தும் ஆர்வம் எல்லா அமைப்புகளுக்கும் மேலோங்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
– ஃபீனிக்ஸ்தாசன்