கிள்ளான் – உலகத் தரம் வாய்ந்த சிறுகதைகளை எழுதியவரும், ‘மனங்கள்’, ‘உடல் மட்டும் நனைகிறது’, ‘ஒருவிடியல்’, ‘உள்ளே வாருங்கள்’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டவருமான சிறுகதைத் தென்றல் பி. கோவிந்தசாமி அவர்களின், ‘மஞ்சள் குடை’ என்னும் தலைப்புக் கொண்ட ஐந்தாம் சிறுகதைத் தொகுப்பு நூல் கிள்ளானில் வெளியீடு காணவிருக்கிறது.
கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத் தலைவரும் ம.இ.கா. காப்பார் தொகுதித் தலைவருமான திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்று நூலை வெளியிடுவார். மலேசியத் தமிழ்எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. ம. மன்னர் மன்னன் (படம்) நூலை அறிமுகப்படுத்துவார்.
பாப்பாவின் பாவலர் முனைவர் முரசு நெடுமாறன் (படம்) வாழ்த்துரை நல்குவார். திருமதி நளினி சொக்கநாதன் சுவைப்புரை வழங்குவார். வெளியீட்டு விழா நிகழ்வு, 11.10.2015ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கவுள்ளது. சிற்றுண்டி, தேநீர் விருந்தோம்பலுடன் தொடங்கவுள்ள இந்நிகழ்வு, கிள்ளான், ஜாலான் இஸ்தனாவில் (AIA கட்டடத்திற்கு எதிரில்) அமைந்துள்ள ‘ஸ்மைலீஸ்’ (Smileys) உணவகத்தின் மேல்மாடியில் நடைபெறும்.
நூலாசிரியரைப் பற்றி..
எழுத்தாளர் பி. கோவிந்தசாமியின் (படம்) சிறுகதைகளில் வரலாற்றுப் பின்னணி இடம்பெற்றிருக்கும்; சமுதாய அவலங்கள் படிந்திருக்கும், ஏமாந்த சமுதாயத்திற்காக இரங்கும் துயர் வெளிப்படும், போலிகளின் புரட்டுகளை அடையாளம் காட்டும்
துணிவிருக்கும்; தொண்டு மனங்களைப் போற்றும் பண்பு பளிச்சிடும். மொத்தத்தில் மலேசியத் தமிழ் சமுதாயம் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கும். எதிர்காலத் தலைமுறையினருக்கு இக்கால, கடந்தகால நிகழ்வுகள் எடுத்துக் காட்டும் அரிய ஆவணப் பதிவிருக்கும்.
மலேசியத் தமிழ் இலக்கிய உலகத்திற்கு வளம் சேர்க்க வரும் இத்தகு மூத்த எழுத்தாளரின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதொடு நூலை வாங்கி ஆதரவளிக்குமாறும் தமிழ் நெஞ்சங்களை ஏற்பட்டுக் குழுவினர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.