மணிலா- தெற்கு பிலிப்பின்ஸ் தீவுப் பகுதியில் மாயமான எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பாகம் கிடைத்திருப்பதாக வெளியான தகவலை பிலிப்பின்ஸ் அரசு மறுத்துள்ளது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவல்களில் உண்மை ஏதுமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், சபாவைச் சேர்ந்த அந்தக் குடும்பம் ஏன் அவ்வாறு ஒரு பொய்யான தகவலைக் கூற வேண்டும்? பொய்யான தகவலைக் கூறியதோடு அல்லாமல் ஏன் காவல்துறையில் சென்று புகார் அளிக்க வேண்டும்? ஏதேனும் ஒரு விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியா? என்பது மர்மமாகவே உள்ளது.
அதற்கான பின்னணியில் உள்ள காரணத்தை காவல்துறை விசாரணை நடத்தி கண்டறிந்தால் மட்டுமே, எதிர்காலத்தில் மேலும் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்பமாட்டார்கள்.
இதனிடையே, பிலிப்பின்ஸ் கடற்படை கமாண்டர் கேப்டன் கியோவன்னி கார்லோ பாகார்டோ இதுகுறித்து கூறுகையில், விமானப் பாகம் இருப்பதாகக் கூறப்படும் தீவுப்பகுதியை ஆய்வு செய்வதற்காக அதிவிரைவுப் படகு ஒன்றை அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“விமானத்தின் சிதைந்த பாகத்தைக் கண்டதாக ஆடவர் ஒருவர் தெரிவித்ததாக வெளியான தகவலையடுத்து அப்பகுதிக்கு படகு அனுப்பப்பட்டுள்ளது. சக்பே தீவுப் பகுதியில் வசிப்பவர்களிடமும், மீனவர்களிடமும் இதுகுறித்து விசாரித்தபோது தங்களுக்கு எந்த விவரமும் தெரியாது எனக் கூறிவிட்டர். அத்தீவில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கும் எந்தத் தகவலும் தெரியவில்லை. எனவே இப்படியொரு தகவல் வெளியானது ஆச்சரியமளிக்கிறது. எனினும் அதுகுறித்து விசாரித்து வருகிறோம்,” என்றார் கியோவன்னி.
சக்பே தீவு சற்றே பெரியது என்றும், அங்கு ஆய்வு நடத்துவதற்கு அதிக காலமாகும் என்றும், இந்த ஆய்வானது தன்னிச்சியைக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக இந்தத் தீவு அமைந்துள்ள கடற்பகுதியில் விமான இருக்கையில், எலும்புக் கூடு ஒன்று, இருக்கைப் பட்டையுடன் காணப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.