சென்னை – கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக சினிமா நிதியாளர் முகுன் சந்த் போத்ரா என்பவர் நீதிபதிகள் அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வைரமுத்து மீது வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளனர். திரைப்பிரபலங்கள் மீது வழக்கு தொடுப்பது சாதாரணமான ஒன்று தான் என்றாலும், வைரமுத்து மீது நீதித்துறை சாராத ஒருவர், நீதிபதிகள் அவமதிப்பு வழக்கு தொடர காரணம் என்ன என்று ஆராய வேண்டி உள்ளது.
அது ஒருபுறம் இருந்தாலும் வைரமுத்து, அப்படி என்ன தான் பேசினார் என்ற ஆவல் ஏற்பட, வைரமுத்து பேசிய அந்த காணொளியை ஆராய்ந்தோம். மறைந்த நீதி அரசர் கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினி, பா.சிதம்பரம், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய வைரமுத்து, “சில நீதிபதிகள் ராமாவதாரமாக வாழ்கிறார்கள். கிட்டே போனால் நெருப்பாக வாழ்கிறார்கள். அவரைப்பற்றி ஒன்று சொன்னால், சொல்கிற நா எரிந்துவிடும் என்று சொல்கிறார்கள். இந்த நேர்மையை அவர்கள் கட்டிக் காக்கிறார்கள்.”
“ஓய்வு பெறுவதற்கு 6 மாதம் முன்பு அவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்திருக்கிற நேர்மை, ஒருநாள் வெட்கப்பட்டால் இந்த தேசம் என்னவாகும். சந்தேகப்பட முடியாத தளத்தை தயாரித்துக் கொண்டு, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தவறுகளை செய்துவிட்டுப் போகிறவர்களை நாம் என்ன சொல்லி அழைப்பது. நீதித்துறையை சமூகம் கவனமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது” என்று அவர் அந்த விழாவில் பேசியிருந்தார்.
வைரமுத்துவின் இந்த கருத்திற்காகத் தான், அந்த நிதியாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். வைரமுத்து இவ்வாறு மறைமுகமாக விமர்சிக்கும் அந்த நீதிபதி யார் என்று ஆராய்ந்தால், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு விடுதலை அளித்த நீதிபதி குமாரசாமியைத் தான் விமர்சிக்கிறாரோ? என்ற சந்தேகம் வலுப்படுகிறது. ஏனெனில், நீதிபதி ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் முன்பு தான், ஜெயலலிதா வழக்கை விசாரித்தார்.
அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி, தனது ஓய்வை அறிவித்தார். நீதிஅரசர் கைலாசத்திற்கு தபால் தலை வெளியீட்டு விழா நடந்தது, கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி. இதுபோன்ற காரணங்களால் தான் வைரமுத்து விமர்சனம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளதாகத் தோன்றுகிறது.
எனினும், தனிப்பட்ட கருத்துக்களை கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதே கருத்து, இதுபோன்ற அவமதிப்பு வழக்காக மாறும் அதனை நீதிமன்றங்கள் விசாரணை செய்வதும் இயல்பான ஒன்றுதான்.
இதே விழாவில், நீதிமன்றங்கள் குறித்து ரஜினி கூறி கருத்தை திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா வழக்குடன் தொடர்புபடுத்தி சர்ச்சையை கிளப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.
– சுரேஷ்