Home Featured நாடு சாலையோரம் காரை நிறுத்தும் நண்பா – இதையும் கொஞ்சம் கவனி அன்பா!

சாலையோரம் காரை நிறுத்தும் நண்பா – இதையும் கொஞ்சம் கவனி அன்பா!

646
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தலைநகரில் வாகன நெரிசல் ஒருபுறம் நமது நேரத்தைத் தின்று விடுகின்றது என்றால், செல்ல வேண்டிய இடத்தை அடைந்தவுடன் அங்கு வாகனத்தை நிறுத்துவதற்குப் படும்பாடு அதை விட திண்டாட்டம்.

இந்த வாகன நிறுத்தும் பிரச்சனை சாதாரண சாலையோரக் கடைகள் தொடங்கி பெரிய பெரிய வணிக வளாகங்கள் வரை எல்லா இடங்களிலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

எப்படியோ அதிருஷ்டவசமாக ஒரு பார்க்கிங் கிடைத்து அதில் காரை நிறுத்திவிட்டு, கடைக்கோ அலுவலகத்திற்கோ சென்றுவிட்டு, அவசரமாக வேறு ஒரு இடத்திற்குச் செல்ல காரை நெருங்குவோம். அங்கு மிகப் பெரிய தலைவலி காத்திருக்கும்.

#TamilSchoolmychoice

10ALTparking.533

நமது காரை வழிமறித்து யாரோ ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு, அருகே எங்காவது ஒரு கடையில் சாவகாசமாக தேநீர் அருந்திக் கொண்டிருப்பார்.

அந்தக் காரில் ஹேண்ட் பிரேக் தளர்ந்த நிலையில் இருந்தால், அன்றைய நாளில் நமக்கு எங்கோ ஒரு மூலையில் அதிருஷ்ட மச்சம் ஒட்டியிருக்கிறது என்று எண்ணிக் கொள்ளலாம். வியர்க்க விறுவிறுக்க அந்தக் காரை சற்று நகர்த்தி அடுத்த காரின் முன் வைத்துவிட்டு (அடுத்த சுற்று), நமது காரை வெளியே எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அந்த அவதியில், அந்தக் கோபத்தில் காரை எடுத்துக் கொண்டு போய் எங்காவது விபத்தில் சிக்குவது அது வேற கதை.

அதேவேளையில், அந்தக் காரில் ஹேண்ட் பிரேக் போடப்பட்டிருந்தால், கேட்கவே வேண்டாம். அன்றைய நாள் சூனியம் என்றே நினைத்துக் கொள்ளலாம். பல முறை ஒலி எழுப்பி, அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லாம் நம்மை பரிதாபமாகப் பார்க்க, அங்கும் இங்கும் கண்களால் தேடித் துலவி ஓய்ந்து இறுதியாக ஒரு மௌன நிலையை அடைந்த பின்னால், சாவகாசமாக அந்த மனிதர் சிரித்துக் கொண்டே வந்து அவரது காரை நகர்த்துவார்.

இது அனுதினமும் நாம் அனுபவித்து வரும் வாடிக்கையான அவஸ்தைகளில் ஒன்று!

புத்திசாலித்தனமான ஒரு யோசனை!

இப்படித் தான் தலைநகரில் எனக்கு ஒரு அனுபவம் நிகழ்ந்தது. ஒரு முக்கியமான அலுவல் காரணமாக அவசரமாக செல்ல வேண்டிய நான் எனது காரை நெருங்கிய போது, அதை வழி மறித்து ஒரு கார் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

செல்ல வேண்டிய இடமோ தூரம்.. சந்திக்க வேண்டிய நபரோ முக்கியமான பிரபலம்… சரியான நேரத்தில் இடத்தை அடையவில்லை என்றால் அதன் விளைவோ பெருந்துயரம். காலில் வெந்நீரைக் கொட்டியது போல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தேன்.

காரின் பக்கவாட்டில் நின்று கொண்டு அதன் ஹேண்ட் பிரேக் தளர்த்தியிருக்கிறதா? என்று பார்த்தேன். கச்சிதமாக ஹேண்ட் பிரேக் இயக்கப்பட்டிருந்தது. சரி.. இன்றைய நாள் சோகமான நாளாக அமையப் போகிறது என்ற பதற்றத்தில், எனது காரின் கதவை திறந்து (அபாய) ஒலி எழுப்பத் தயாரான போது, அக்காரின் ஓட்டுநர் இருக்கையின் மேல் கண்ணாடியில் வைக்கப்பட்டிருந்த அட்டை ஒன்று கண்ணில் பட்டது. அதில்..

“வணக்கம் நண்பரே.. தொந்தரவிற்கு மன்னிக்கவும் உங்கள் காரை வழிமறித்து எனது காரை நிறுத்தியுள்ளேன். உடனடியாக இந்த எண்ணிற்கு அழையுங்கள்………………………….”

என்று ஆங்கிலம், மலாய், சீன மொழியில் எழுதப்பட்ட வாசகம் எழுதப்பட்டிருந்தது.

ஒரு நிமிடம் உள்ளூர கொதித்துக் கொண்டிருந்த எரிமலை சற்றே தணிந்தது. அந்த நம்பருக்கு அழைத்த போது ஒரு பெண் பேசினார். நடந்ததைக் கூறியவுடன் அடுத்த 2 நிமிடங்களில் அங்கு வந்து தனது காரை நகர்த்தினார்.

எனது கோபம், பதற்றம் எல்லாம் தணிந்து ஒரு மகிழ்ச்சியான மனநிலைக்கு வந்துவிட்டேன். காரணம், அவர் என் காரை வழிமறித்து நிறுத்திய தவறைக் காட்டிலும், எனது நேரத்திற்கும், எனது உணர்விற்கும் மதிப்பளிக்கும் அவரது செயல் உள்ளூர மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்டார். நான் புன்னகையுடன் நன்றி என்று கூறி அங்கிருந்து நகர்ந்தேன்.

சாலையோரம் காரை நிறுத்தி அடுத்த வாகனங்களுக்கு இடையூறாக இருப்பது, அடுத்த காரை வழிமறித்து நிறுத்துவது சாலை விதிகளின் படி தவறு. அது தவறா? இல்லையா? செய்யலாமா? செய்யக்கூடாதா? என்பதல்ல இப்போது நாம் கூறுவது. சாலை விதிகளை மீறி கார் நிறுத்தப்பட்டிருந்தால், போக்குவரத்து காவல்துறை தக்க நடவடிக்கை எடுப்பார்கள் அது நிச்சயம்.

ஆனால், அப்படி சாலையில் காரை நிறுத்த வேண்டிய அவசர சூழல் ஏற்பட்டால், அடுத்தவரின் உணர்வுகளைப் புரிந்து நாகரிகமான முறையில் இப்படி ஒரு அட்டையை வைக்கலாமே? அதனால் பல பிரச்சனைகளை உருவாவதைத் தடுக்கலாம்.

இந்த யோசனைப் பிடித்துப் போகவே அன்றைய நாளே.. நானும் ஒரு அட்டையைத் தயார் செய்து என் காரில் வைத்துவிட்டேன்.

-ஃபீனிக்ஸ்தாசன்