Home Featured நாடு “மஇகா உதவித் தலைவர் பதவிக்கு நான் ஏன்  போட்டியிடுகின்றேன்?” சுந்தர் சுப்ரமணியம் விளக்குகிறார்

“மஇகா உதவித் தலைவர் பதவிக்கு நான் ஏன்  போட்டியிடுகின்றேன்?” சுந்தர் சுப்ரமணியம் விளக்குகிறார்

644
0
SHARE
Ad

SUNTHERகோலாலம்பூர் – மஇகா தேசிய உதவித் தலைவருக்காகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சுந்தர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் தான் போட்டியிடுவதற்கான காரணங்களை இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.

“தேசிய மஇகா தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட  நாள்முதல், நாடெங்கிலும் இருந்து எனது ஆதரவாளர்களும், எனது நலம் விரும்பிகளும், மஇகா உறுப்பினர்களும், என்னை அழைத்து நான் எந்தப் பதவிக்குப் போட்டியிடப் போகின்றேன் என்ற கேள்வியை என்னிடம் கேட்டு வருகின்றார்கள். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மஇகா மத்திய செயலவை உறுப்பினராகப் நான் பணியாற்றி வருகின்றேன். இந்த காலகட்டத்தில் நான் நாடு முழுவதிலும் பயணம் செய்து மஇகா உறுப்பினர்களின் எண்ண ஓட்டங்களையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து வந்திருக்கின்றேன். அதன் மூலம் கட்சியின் இன்றைய நிலைமை, உட்கட்டமைப்பு, போன்ற அம்சங்களைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது” எனக் கூறியிருக்கும் சுந்தர் தொடர்ந்து அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“இந்த அனுபவங்களின் மூலமாக, தொடர்ந்து மஇகா தேசிய அரசியலில் ஈடுபடவும், என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கவும் எனக்கு நம்பிக்கை பிறந்திருக்கின்றது என்பதால், கட்சியின் நலனுக்காகவும் உயர்வுக்காகவும் நான் தொடர்ந்து தீவிர கட்சி அரசியலில், தேசிய அளவில் பாடுபட வேண்டும் என்ற முடிவையும் நான் எடுத்திருக்கின்றேன். கடந்த சில ஆண்டுகளாக எனது தலைமையின்கீழ் இயங்கும் ஓசை அறவாரியத்தின் மூலம் என்னால் இயன்ற சிறு அளவிலான சமூகப் பணிகளையும் நான் மேற்கொண்டு வந்திருக்கின்றேன். அதன் மூலம், இந்திய சமுதாயத்தினரோடு நான் அணுக்கமாகப் பணியாற்றியதால்,  அவர்களின் இன்றைய நிலைமையையும், அவர்கள் எதிர்நோக்கும் எண்ணிலடங்கா பிரச்சனைகளையும்,  என்னால் நன்கு அறிய முடிந்திருக்கின்றது”

#TamilSchoolmychoice

“அதே வேளையில் அரசியல் ரீதியாக, நமது சமுதாயம் இந்நாட்டில் சிறப்புடனும், வெற்றிகரமாகவும் வாழ, மஇகாவும், தேசிய முன்னணியும் இன்னும் முக்கியமாகத் தேவை என்பதை இந்திய சமுதாயத்திற்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் எடுத்துக் காட்ட வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் தற்போது இருக்கின்றோம்” என்று சுந்தர் கூறியுள்ளார்.

ஏறத்தாழ 25 ஆண்டுகாலம் மஇகாவின் தேசியத் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த சுந்தரின் தந்தை டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் அரசாங்கத்தில் துணை அமைச்சராகவும், செனட்டராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

இன்னும் மஇகாதான் நமது நம்பிக்கை நட்சத்திரம்

“இன்றைய சூழ்நிலையில் அரசியலில் நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், மஇகாதான் என்பதில் ஐயமில்லை. ஆனால், எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலை, வலிமையான எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கடுமையான சூழ்நிலையில் நாம் சந்திக்க வேண்டியிருப்பதால் நமது கட்சியை நாம் பெருமளவில் சீரமைக்க வேண்டியுள்ளது” என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ள சுந்தர்,

Tan Sri S.Subramaniam“அடுத்த தலைமுறை தலைவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் நமது கட்சி மீதும் கட்சியின் கடந்த காலப் போராட்டங்கள்  மீதும் இன்னும் நம்பிக்கை இருக்கின்றது என்பதையும், நமது கட்சியின் பாரம்பரியத்தையும், கடந்த காலத் தலைவர்களின் அளப்பரிய பணிகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு இருக்கின்றது என்பதையும் நாம் எடுத்துக் காட்ட வேண்டிய நிலைமையில் தற்போது இருக்கின்றோம்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சில சிந்தனைகளோடு, கடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும், அவரது தந்தை டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் அவர்களின் நீண்ட கால ஆதரவாளர்களையும், மஇகா தொகுதித் தலைவர்களையும் சந்தித்து, அவர்களின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் தான் பெற்றிருப்பதாகவும் சுந்தர் தெரிவித்துள்ளார்.

தேசிய உதவித் தலைவருக்குப் போட்டியிடுகின்றேன்

அவர்களுடனான சந்திப்பின் பயனாக கிடைத்த ஊக்கங்கள், அறிவுரைகள் காரணமாகவும், மஇகாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் சுந்தர் அறிவித்துள்ளார்.

“இந்த முறை நடக்கும் கட்சித் தேர்தலில் மூன்று உதவித் தலைவர்களுக்கான பதவிகளும் காலியாக இருக்கின்றன என்பதும் அதனால், நடப்பு உதவித் தலைவர் என யாரும் இல்லை என்பதும் நான் உதவித் தலைவருக்குப் போட்டியிடுவதற்கான காரணமாகும். யாரையும் எதிர்க்காமல், காலியாக உள்ள பதவிகளுக்குத்தான் போட்டி என்பதால் கட்சியில் அடுத்த கட்ட உயர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு இதுவே தக்க தருணம் என்ற காரணத்தையும் முன்வைத்துத்தான் நான் இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்கின்றேன்” என்றும் சுந்தர் மேலும் கூறியுள்ளார்.

“கட்சியின் உயர் பதவியொன்றை அடைவது மட்டுமே எனது இந்தப் போட்டியின் நோக்கம் அல்ல. மாறாக, என்னால் இயன்ற உழைப்பையும், பங்களிப்பையும் மேலும் செம்மையான முறையில் கட்சிக்கு வழங்க கிடைத்த ஒரு வாய்ப்பாகவே, இந்தப் போட்டியை நான் கருதுகின்றேன். கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் எனக்குள்ள தொடர்புகளின் துணை கொண்டு, கட்சியில் இருக்கும் எனது தந்தையின் தீவிர ஆதரவாளர்களின் ஒத்துழைப்போடு, கட்சியின் மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக என்னால் சிறந்த பணிகளைக் கட்சிக்கு வழங்க முடியும் என நான் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். கடந்த காலங்களில் எனது தந்தையார் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் கட்சிக்கும், இந்திய சமுதாயத்திற்கும் வழங்கி வந்திருக்கும் பங்களிப்பும், பணிகளும் என் மூலமாக தொடரப்பட வேண்டும் என எனது தந்தையின் ஆதரவாளர்களும், அபிமானிகளும் என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் நான் உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்” என்றும் சுந்தர் தனது நிலைப்பாடு குறித்து விளக்கியுள்ளார்.

டாக்டர் சுப்ராவுக்கு தோள் கொடுப்பேன்

Datuk-Seri-Dr-S.Subramaniam“கட்சியை சூழ்ந்திருக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ள, நமது கட்சியை மறு-நிர்மாணம் செய்வதற்கும், மறு சீரமைப்பு செய்வதற்கும் தீவிரமாக முனைந்திருக்கும் நமது தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்களின் முயற்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உதவித் தலைவர்களில் ஒருவராக என்னால் தோள் கொடுக்க முடியும், துணை நிற்க முடியும் என்றும் நான் உறுதியாக நம்புகின்றேன். எனது முடிவை கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவிடமும் தெரிவித்திருக்கின்றேன். கட்சி ஜனநாயகப் பாதைக்கு மீண்டும் திரும்ப, இந்த முறை நடைபெறும் தேர்தலில், எந்தப் பதவிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட தலைவரையும் ஆதரிக்கவோ, அங்கீகரிக்கவோ போவதில்லை என நமது தேசியத் தலைவர் எடுத்திருக்கும் உறுதியான முடிவும், நான் உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான மற்றொரு முக்கிய காரணமாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்” என்றும் சுந்தர் விவரித்துள்ளார்.

“எனது இந்த முடிவுக்கு கட்சியின் பேராளர்கள் வரவேற்பு கொடுப்பார்கள், வாழ்த்து தெரிவித்து, தங்களின் ஆதரவை எனக்கு வழங்குவார்கள் என்றும் நான் நம்புகின்றேன். கட்சியின் மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா இல்லையா என்ற தீர்ப்பை, வாக்காளர்களின் அறிவார்ந்த முடிவுக்கே நான் விட்டு விடுகின்றேன்” என்றும் சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துப் போட்டியாளர்களும் எனது நண்பர்களே!

இந்த முறை தேசிய உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கட்சியில் நீண்ட காலமாக ஈடுபாடு கொண்டிருக்கும் முக்கியத் தலைவர்கள் என்பதோடு, தனக்கி நெருக்கமான நண்பர்களும் ஆவர் என்பதால்,  கட்சியின் நலனை முன்வைத்தும், கட்சியில் அனைவருக்கும் உள்ள ஜனநாயக உரிமைகளுக்கும் ஏற்பவும்தான் இந்தப் போட்டியில் குதித்திருப்பதாகவும் யார் மீதும் தனிப்பட்ட போட்டியோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை என்றும் யாரையும் தோற்கடிப்பதற்காக போட்டியிடவில்லை என்றும் சுந்தர் தெரிவித்துள்ளார்.

எனவே, நட்பு முறையில், சகோதரத்துவத்துடனும், ஆரோக்கியமான முறையிலும் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், புண்படுத்தாமல், எதிர்மறைக் கருத்துகளைத் தெரிவிக்காமல் – தனது பிரச்சாரங்களை மேற்கொள்ளப் போவதாக உறுதி மொழியையும் சுந்தர் தனது அறிக்கையில் வழங்கியுள்ளார்.

“கட்சிக்கும், சமுதாயத்திற்கும் அதன் முன்னேற்றத்திற்கும் என்னால் எப்படி பங்காற்ற முடியும், பணியாற்ற முடியும் என்பது தொடர்பிலும், அதற்காக எனது  வியூகங்கள், திட்டங்கள் என்ன என்பது குறித்தும்தான் எனது பிரச்சாரங்கள் மையம் கொண்டிருக்கும். எனது இந்த உதவித் தலைவருக்கான போட்டியில், மஇகா உறுப்பினர்கள், தலைவர்கள், பேராளர்கள் அனைவரும் தங்களின் ஆதரவையும், அரவணைப்பையும் எனக்கு வழங்க வேண்டுமென மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் சுந்தர் தனது அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.