கோலாலம்பூர்- காஜாங்கைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவனைக் கடத்தி 3 லட்சம் ரிங்கிட் பணம் பறிக்க முயன்றதாக காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூவர் மீது நேற்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.
படம்: நன்றி – சின் சியூ டெய்லி
வர்த்தகரான சியோ கெக் கியோங் (44 வயது), லோரி ஓட்டுநர் முகமட் சைஃபுலாம்ரி ஜர்காசி (28 வயது) மற்றும் பணியாளர் ரிடுயான்சியா யாயா (32 வயது) ஆகிய மூவரும் அக்டோபர் 9ஆம் தேதி சுங்கை சுவா பகுதியில் வைத்து அச்சிறுவனைக் கடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடத்தல் சட்டப்பிரிவு 31ன் கீழ் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
சிறுவன் கடத்தப்பட்ட ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர், அவனது தந்தையை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் 3 லட்சம் ரிங்கிட் பிணைத் தொகை கேட்டு மிரட்டியதாக சிலாங்கூர் காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ அப்துல் சமாட் மட் தெரிவித்தார்.
இதையடுத்து கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பிணைத்தொகை அடங்கிய பையை, சிறுவனின் தந்தை வைத்துள்ளார். எனினும் கடத்தல் சம்பவம் நிகழ்ந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதில் ஈடுபட்ட 3 ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர். 3 லட்சம் ரிங்கிட் தொகையும் கைப்பற்றப்பட்டது.
கடத்தப்பட்ட 8 மணி நேரத்திற்குப் பின்னர் அச்சிறுவன் மீண்டும் பெற்றோருடன் இணைந்த நிலையில், காவல்துறையினர் துரித கதியில் செயல்பட்டு, கடத்தல்காரர்களை மடக்கியுள்ளனர்.