கோலாலம்பூர், மார்ச்.14- ஊழலில் சிக்கி இருக்கும் கட்சி உயர் மட்டத் தலைவர்களை வேட்பாளர் பட்டியலிருந்து நீக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி இஸ்மாயில் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை நீக்கினால் மட்டுமே மக்களின் நன்மதிப்பினைப் பெற முடியும் என்றார் அவர்.
ஆனால் அவர்களைக் கைவிடுவதற்கு அம்னோ தயாராக இல்லை என்றால் நஜிப் சொல்வது போல தூய்மையான, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களை நிறுத்துவதில் அம்னோ ஆர்வம் காட்டவில்லை என்பதை புலப்படுத்துவதாக அவர் கூறினார்.
சபா முதலமைச்சர் மூசா அமான், சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்,சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ், அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில்,நிதித் துணை அமைச்சர் அவாங் அடெக் ஹுசின்,நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசான், திரங்கானு மந்திரி புசார் அகமட் சைட், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டால் ஆகிய எட்டு பேரும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் அந்த எண்மரும் நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கபடாத நிலையில், விசாரணை மட்டும் அவர்கள்மீது நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.