சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான பரபரப்பு 2015 நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. நாசர் உள்ளிட்ட ஒருசிலரைத் தவிர முழுக்க முழுக்க இளைஞர்கள் நிரம்பிய ஒரு அணியும், சிம்பு உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர முழுக்க முழுக்க மூத்த நடிகர்கள் அங்கம் வகிக்கும் ஒரு அணியும் இந்த தேர்தலை இன்று சந்திக்க இருக்கின்றன.
பொதுவாக சட்டமன்றத் தேர்தலில் வரும் சாதிய பிரச்சனை, மொழிப் பிரச்சனை, இனப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்தும், இந்த ஆண்டு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் சங்கத் தேர்தலில் நடைபெற்றுவிட்டன. பெரும் ஜாம்பவான்கள் இருந்த காலத்திலேயே எழாத பிரச்சனைகள் தற்போது ஏற்பட்டதற்கு காரணம், வெறும் பதவிகள் மட்டும் தானா? அல்லது அதன் பின்னணியில் வேறு ஏதேனும் உள்ளதா? என்பது இன்றும் பொதுப் பார்வையாளனுக்கு புரியாத மர்மமாகவே இருக்கிறது.
நாகரீகமான பிரச்சார மேடையை, அநாகரீகமான வார்த்தைகளால் அலங்கரித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு இரு அணியினரும் எப்படி இணைந்து ஒரு குடும்பமாக செயல்படப் போகின்றனர் என்ற அச்சம் தமிழ் சினிமாவை நேசிக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கைப் பிரச்சனையிலும், நதி நீர் பிரச்சனையிலும் ஒரு குடும்பமாக, ஒரே அணியாக திரண்டு வந்த தமிழ் திரையுலகம் மீண்டும் அதே வீரியத்துடன், அதே ஒற்றுமையுடன் இருக்குமா? என்ற சந்தேகத்தை இந்த தேர்தலின் போது ஏற்பட்ட சம்பவங்கள் கிளப்பிவிட்டுள்ளன.
‘தேர்தல் வெற்றிக்குப் பிறகு அனைவரும் ஒரே அணியாக செயல்படுவோம்’ என்று விஷாலும், ‘பிளவு ஏற்பட்டது ஏற்பட்டது தான். இனி இணைவதற்கு வாய்ப்பே இல்லை’ என சரத்குமாரும் அடிப்படையிலேயே முரண்பட்டுள்ள நிலையில், இன்று நடக்க இருக்கும் தேர்தலும் அதனைத் தொடர்ந்து வெளியாக இருக்கும் முடிவுகளும் கண்டிப்பாக அடுத்தகட்ட பிரச்னைகளுக்கு தான் வித்திடும் என்றே தோன்றுகிறது.
எனினும் இதற்கான பதிலை காலம் தான் கூற முடியும்.
– சுரேஷ்