பெட்டாலிங் ஜெயா – ‘அளவோடு ஆட்டிறைச்சி சாப்பிட்டால் ஆயுள் பலம்’ என்று முன்னோர் கூறிய காலமெல்லாம் கடந்துவிட்டது. தற்போது அதுவே நமது ஆயுளுக்குக் கேடாக அமைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
காரணம், கெட்டுப் போகாமல் இருக்க அதில் கலக்கப்படும் ரசாயனங்கள் ஒருபுறம் இருக்க, உணவுக்கடைகளில் ஆட்டிறைச்சியுடன் மற்ற விலங்குகளின் இறைச்சிகளும் கலக்கப்பட்டு சமைக்கப்படுவதாக திடுக்கிடும் தகவலைக் கூறுகின்றனர் உணவு ஆய்வாளர்கள்.
மலேசியாவைப் பொறுத்தவரையில், பெரும்பாலானவர்களால் விரும்பிச் சாப்பிடப்படும் ஒரு உணவாக ஆட்டிறைச்சி இருந்து வருகின்றது. அதன் காரணமாகவே சில விசமிகள் அதில் மற்ற இறைச்சிகளைக் கலந்து மலிவான விலையில் உணவுக்கடைகளுக்கு விற்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள 9 இந்திய முஸ்லிம் மற்றும் இந்திய உணவுக்கடைகளில் பயன்படுத்தப்படும் ஆட்டிறைச்சியை சோதனைக்குட்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அதில் வேறு இறைச்சிகளின் கலப்படம் இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளதாக ‘த ஸ்டார்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் துறை இயக்குனர் டாக்டர் சித்ரா வடிவேலுவும் இதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
என்றாலும், அதில் கலக்கப்பட்டிருக்கும் இறைச்சி எதுவென்பது அடுத்தக்கட்டப் பரிசோதனைகளுக்குப் பிறகே தெரியவரும் என்று கூறியிருப்பது அதைவிடப் பேரதிர்ச்சியாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் சென்னையில், ஒரு வீட்டில் அளவுக்கு அதிகமான பூனைகளை ஒருவர் வளர்த்து வந்துள்ளார். சாதாரணமாக, ஒரு வீட்டில் ஐந்தாறு பூனைகள் இருக்கலாம். ஆனால் அவரது வீட்டிலோ நூற்றுக்கணக்கான பூனைகள் திரிவதைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்து வீட்டினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆளைப் பிடித்து விசாரணை செய்த காவல்துறை ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது.
அதாவது, அந்த நபர் அந்தப் பகுதியைச் சுற்றி இருக்கும் பல்வேறு உணவுக் கடைகளுக்கு பூனை இறைச்சியை விநியோகம் செய்து வந்துள்ளார். அதையும் அக்கடைகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு திருட்டுத்தனமாக முயல் கறி என்று கூறி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இன்று உலகளவில் மனித இனத்திற்கே அச்சுறுத்தலாக விளங்கி வருவது உணவுக் கலப்படம் தான் என்கிறது ஆய்வு. அதைக் கட்டுப்படுத்த கடுமையான சோதனைகள் நடத்தி தரமான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறை காட்டுவது ஒருபுறம் இருக்க, தனி மனிதப் பொறுப்புணர்ச்சி என்பதன் மூலமே அதை முற்றிலும் ஒழிக்க முடியும்.
தொகுப்பு: செல்லியல்