Home Featured நாடு டைபாய்ட் காய்ச்சல் குணப்படுத்தக் கூடிய ஒன்று – சுகாதார அமைச்சு

டைபாய்ட் காய்ச்சல் குணப்படுத்தக் கூடிய ஒன்று – சுகாதார அமைச்சு

685
0
SHARE
Ad

s-subramaniam1-020713_484_321_100கோலாலம்பூர் – டைபாய்ட் காய்ச்சல் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும் என்றும், அக்காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில் இக்காய்ச்சல் குறித்து பல்வேறு வதந்திகள் பரவுவதாகவும், அவை தொடர்பில் பலர் விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு, டைபாய்ட் காய்ச்சல் குணப்படுத்தக் கூடிய ஒன்று என்பதால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

“அன்றாட வாழ்வில் சுத்தம் மற்றும் சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். டைபாய்ட் என்பது ஆண்டு முழுவதும், வட்டார ரீதியில் வரக்கூடிய காய்ச்சல். அக்காய்ச்சலை கண்டுபிடிக்கக் கூடிய பரிசோதனை வசதிகளும், குணப்படுத்த தேவையான மருந்துகளும் அமைச்சிடம் உள்ளன.

#TamilSchoolmychoice

“சுத்தமாக உள்ள உணவகங்களுக்கு மட்டுமே போக வேண்டுமென பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். தவிர தனிப்பட்ட வகையிலும் சுத்தமாக இருத்தல் வேண்டும். குறிப்பாக உணவுக்கு முன்பும் பிறகும், கழிவறை சென்று வந்த பிறகும் சுத்தத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம்,” என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுப்ரமணியம் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் டைபாய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் கோலாலம்பூரில் மட்டும் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நோய்த் தொற்றுக்கான காரணம் குறித்து சுகாதார அமைச்சு துரித ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.