சென்னை – வெளிநாடுகளில் பிற நாட்டவரிடம் இன வேற்றுமை காண்பதே தவறான கண்ணோட்டமாக கருதப்பட்டு வரும் நிலையில், உள்நாட்டிலே இனப்பாகுபாடு பார்க்கப்படுவதாக நட்பு ஊடகங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் இந்தியர்களாக மதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கான செய்திகளில்(படம்), வட இந்திய ஊடகங்கள் இன வேறுபாடு பார்ப்பதாக பலரும் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள பதிவுகளில், “தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையால் கொல்லப்படும் போதோ அல்லது கைது செய்யப்படும் போதோ தமிழக மீனவர்கள் என குறிப்பிடும் வட இந்திய ஊடகங்கள், பிற மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையாலோ அல்லது அண்டை நாடுகளின் கடற்படையாலோ பாதிக்கப்படும் போது மட்டும் இந்திய மீனவர்கள் எனக் குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும் முடியும்” என்று கேள்வி எழுப்பி உள்ளனர்
மேலும் அவர்கள், “தமிழக மீனவர்களை அடையாளப்படுத்தும் வகையில் குறிப்பிடுவது என்று வைத்துக் கொண்டாலும், பிற மாநிலத்தவர்களையும் அவர்கள் சார்ந்த மாநிலத்தின் பெயரிலேயே குறிப்பிட வேண்டியது தானே. தமிழர்களை மட்டும் தனிமைப்படுத்துவது எதனால்?” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றொரு பதிவில், “அப்துல் கலாமையும், சுந்தர் பிச்சையையும், ரகுமானையும் இந்தியனாக பார்க்கும் அத்தகைய ஊடகங்கள், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களையும் இந்தியர்களாக பார்க்க வேண்டும். அப்பொழுது தான் மீனவர்கள் பிரச்சனையில் விடிவு பிறக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.