சென்னை – ‘தி கைட் டூ ஸ்லிப்பிங் இன் ஏர்போர்ட்ஸ்’ (The guide to sleeping in airports) என்ற சுற்றுலா இணையதளம் சமீபத்தில் ஆசிய அளவில் மிக மோசமான விமான நிலையங்களுக்கான பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் சென்னை விமான நிலையத்திற்கு ஏழாவது இடம் கிடைத்துள்ளது.
‘திடீர், திடீர் னு உடையுதாம், சாயுதாம்’ இப்படி வடிவேலு பாணியில் சென்னை விமான நிலையத்தின் நிலை பற்றி நட்பு ஊடகங்களில் எழாத கேலிப் பேச்சுகளே இல்லை. இந்த வருடத்தில் மட்டும் 50 முறைக்கு மேல் விமான நிலைத்தில் சிறிய பெரிய அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இப்படி இருக்கையில் குறிப்பிட்ட அந்த இணைய தளம் வெளியிட்டுள்ள பட்டியல், சென்னை விமான நிலையத்தின் நிலையை ஆசிய அளவில் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. இந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம் பெற்றுள்ள, ஒரே விமான நிலையம் சென்னைதான் என்பது கூடுதல் ‘சாதனை’.
இது தொடர்பாக தி கைட் டூ ஸ்லிப்பிங் இன் ஏர்போர்ட்ஸ் நிறுவனம் கூறுகையில், “நாங்கள் சுமார் 27 ஆயிரத்து 297 விமானப்பயணிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.