Home Featured நாடு ஒரு கற்பனைப் பார்வை: மலேசியாவிலிருந்து பிரிந்து – ஜோகூர் சிங்கப்பூரோடு இணைந்தால்?

ஒரு கற்பனைப் பார்வை: மலேசியாவிலிருந்து பிரிந்து – ஜோகூர் சிங்கப்பூரோடு இணைந்தால்?

871
0
SHARE
Ad

Johore-Singapre mapகோலாலம்பூர் – ஜோகூர் மாநிலம் மலேசியாவிலிருந்துப் பிரிந்து சிங்கப்பூருடன் இணையுமா – அப்படி இணைவதற்கான வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற கற்பனை விரிந்தால்?

சில நாட்களுக்கு முன்னால் ஜோகூர் மாநிலத்தின் இளவரசர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் (படம்) விடுத்திருக்கும் ஓர் அதிரடி அறிவிப்பு பல்வேறு சட்ட விவாதங்களுக்கும், கற்பனைகளுக்கும் வித்திட்டுள்ளது என்றால் மிகையாகாது.

Tunku Ismail Tunku Ibrahim1946இல் சில விதிகளோடு ஜோகூர் கூட்டரசு மலாயாவில் இணைந்ததாகவும், அந்த விதிமுறைகள் மீறப்பட்டால், ஜோகூர், மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல முடியும் என்பதும்தான் அம்மாநிலத்தின் அரச குடும்பத்தின் வாதம்!

#TamilSchoolmychoice

முதலாவதாக, மலேசியாவின் ஒரு மாநிலம் சட்டபூர்வமாக, அதிகாரபூர்வமாக, நமது நாட்டிலிருந்து பிரிந்து செல்ல முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.

ஆனால் மலாயா கூட்டரசில் ஒரு மாநிலம் இணைந்தது இணைந்ததுதான், இனி பிரிந்து செல்ல சட்டரீதியாக இடமில்லை என்றும் ஆணித்தரமாக வாதிடுகின்றனர் சில சட்ட நிபுணர்கள்.

இதுநாள் வரை சபா, சரவாக் மாநிலங்கள் அவ்வாறு பிரிந்து செல்லக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்றுதான் அரசியல் பார்வையாளர்கள் வாதிட்டு வந்திருக்கின்றார்கள். சபா, சரவாக் மாநிலங்களில் இதற்கென சில இயக்கங்களே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, அதற்காக ஒரு சிலர் நீதிமன்றத்தில் பிரிவினை வாதத்திற்காக தேச நிந்தனை குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆனால், ஜோகூர் போன்ற ஒரு மாநிலம் அவ்வாறு பிரிந்து செல்ல முடியும் என்ற வாதத்தை அம்மாநில இளவரசரே முன்வைத்திருக்கின்றார் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க அம்சம்.

உலக அரங்கில் பல புதிய நாடுகள் உருவாகியுள்ளன

ஒரு காலத்தில் புதிய நாடுகள் இனி உருவாக வாய்ப்பில்லை என்றே உலக அரசியல் அரங்கில் கருதப்பட்டு வந்தது.

syCauseway26112013e

ஜோகூரையும், சிங்கப்பூரையும் நில ரீதியாக நீண்ட காலமாக  இணைத்து வைத்திருக்கும் பாலம்

ஆனால், அண்மைய ஆண்டுகளில், பல்வேறு நாடுகள் இன ரீதியாக, பூகோள ரீதியாக, மத ரீதியாக மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக தனிநாடுகளாகப் பிரிந்து சென்று புதிய நாடுகளாக உருவாகிவிட்டன. மிக அண்மையில் ஸ்பெயின் நாட்டுக்கும் கூட இத்தகைய நிலைமை ஏற்பட்டது.

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரிந்து செல்லவும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஜோகூர் மக்கள் விரும்பினால், அந்த விருப்பம் ஒரு போராட்டமாக உருவெடுத்தால், மாநிலத்தின் அரச குடும்பமே அந்தப் போராட்டத்திற்குத் துணை நின்றால் – ஜோகூர் மாநிலம் பிரிந்து செல்வது சாத்தியமே!

ஐக்கிய நாட்டு சபையும் தலையிட்டு, பொது வாக்கெடுப்பு ஒன்றை, ஜோகூர் மக்களிடம் ஜனநாயக முறைப்படி நடத்தி, அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையோர், ஆதரவளித்தாலும், ஜோகூர் தனி நாடாகப் பிரிந்து செல்ல முடியும்.

அவ்வாறு பிரிந்து சென்று ஜோகூர் சிங்கப்பூருடன் இணைந்தால்?

ஜோகூர் பிரிந்து சிங்கப்பூரில் இணையுமா?

Johore-Singapore-workers-walking across causewayஜோகூரிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மேம்பாலத்தின் வழியாக  நடந்து சென்றும், மோட்டார் சைக்கிள்களின் மூலமாகவும் சிங்கப்பூர் சென்று வேலை செய்து வருகின்றனர்….

 ஜோகூர் மாநிலத்திற்கு மட்டும் சில சிறப்பு சலுகைகள் உள்ளன.  மலேசிய மாநிலங்களில் ஜோகூர் மட்டுமே தனக்கென சொந்த இராணுவத்தையும், பாதுகாப்புப் படையையும் வைத்துக்கொள்ள அதிகாரம் கொண்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருடன் அப்படி இணையும் போது ஜோகூர், பூர்வீக மலாய்க்காரர்களுக்கு பூமி புத்ரா சலுகைகள், ஜோகூர் குடியுரிமை பெற்றவர்களுக்கு சில சலுகைகள் என சிலவற்றை வைத்துக் கொண்டு, நிதி நிர்வாகம், இராணுவம், காவல்துறை, பாதுகாப்பு போன்ற நிர்வாகங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு –

ஒரு புதிய பிரதேசமாக, ஒரு புதிய நாடாக ஜோகூர் உருவாகினால், அதன் மூலம் சிங்கப்பூரும் உலகின் ஒரு மாபெரும் வல்லரசாக உருவாக முடியும் என்பதோடு, ஜோகூரும் வளமையும், செல்வமும் கொழிக்கும் ஒரு நாடாக உருமாறும்.

இன்றைக்கும் செல்வ வளம் கொழிக்கும் புருணை நாட்டின் நிதி நிர்வாகம் சிங்கப்பூர் வசம்தான் இருக்கின்றது என்பதையும், சிங்கை மற்றும் புருணை டாலர்களின் மதிப்பு எப்போதும் சம அளவிலேயே இருப்பதற்கான காரணமும் இதுதான் என்பதையும் நாம் இந்த இடத்தில் நினைவு கூரலாம்.

ஜோகூர் மாநிலத்திற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான நிலம், மக்கள், வணிகம் ரீதியான தொடர்புகள் மிக நீண்ட பாரம்பரியமும், சரித்திர முக்கியத்துவமும் வாய்ந்தவை.

ஜோகூர் சுல்தானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிங்கப்பூரில் நிறைய வணிகத் தொடர்புகள் இருக்கின்றன. அதே போல, சிங்கப்பூரில் உள்ள நிறைய வணிக நிறுவனங்கள் ஜோகூரில் தொழிற்சாலைகளையும், நிலம் கொண்ட வணிகங்களையும் அமைத்துள்ளன.

நிலத்தால் இன்னும் விரிவடைய முடியாமல் தவிக்கும் தீவு நாடு சிங்கப்பூர்.

ஜோகூர் மாநிலமோ, சிங்கப்பூருக்குத் தேவையான தொழிலாளர் பலத்தையும், மக்கள் பலத்தையும், பரந்து விரிந்த நிலப் பிரதேசத்தையும் கொண்ட மாநிலம். எனவே இரண்டும் இணைந்து – ஒரு புதிய நாடாக உருவாகினால்…

கற்பனை என்று ஒரு சிலர் கருதலாம். நடக்காது என்று ஒரு சிலர் வாதிடலாம்.

உலக அரங்கின் சரித்திரப் பக்கங்களைப் புரட்டினால், நம்ப முடியாத பல நாடுகள் பிரிந்திருக்கின்றன, புதிய நாடுகளாக உருவாகியிருக்கின்றன.

இன்றைக்கு ரஷியாவைச் சுற்றி இத்தனை புதிய நாடுகள் உருவாகும் என்று எந்த சரித்திர ஆசிரியரும் அன்றைக்கு அடித்துச் சொன்னதில்லை. ஆனால், அது நடந்தேறியது – நாடுகள் பல உருவாகின.

யார் கண்டது? ஜோகூருக்கும் எதிர்காலத்தில் அவ்வாறு நிகழலாம்!

ஜோகூரும்-சிங்கப்பூரும் இணைந்த ஒரு புதிய நாடு உருவாகலாம்!

-இரா.முத்தரசன்