பெட்டாலிங் ஜெயா – அண்மையில் பெட்டாலிங் ஜெயா செக்ஷன் SS9A/12 பகுதியில் தீபாவளி சந்தை கடைகள் வழங்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட இந்திய வணிகர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அவர்களின் பிரச்சனைகள் என்ன என்பதைக் கவனிக்க வேண்டுமே தவிர, அவர்களை குண்டர் கும்பல்கள், கேங்ஸ்டர்கள் எனப் புறக்கணிக்கக் கூடாது என மஇகாவின் தேசியப் பொருளாளர் டத்தோ ஜஸ்பால் சிங் (படம்) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய சிறு வணிகர்களை குண்டர்கள் எனக் கூறியுள்ள பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவின் செய்கை குறித்தும் ஜஸ்பால் சிங் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.
“இந்திய வணிகர்களை டோனி புவா எவ்வாறு குண்டர்கள் எனக் கூறத் துணிந்தார்?” என்றும் கேள்வி எழுப்பிய ஜஸ்பால், அது மட்டுமில்லாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியர்களை கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்டு தோனி புவா விமர்ச்சித்துள்ளார் என்றும் கடுமையாகச் சாடினார்.
“எதிர்க்கட்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால், கூட்டம் சேர்த்தால் அது நியாயம், என பெர்சே போராட்டத்தின் போது டோனி புவா (படம்) போன்ற எதிர்க்கட்சிக்காரர்கள் கூறி வந்தார்கள். மக்களின் எதிர்ப்பை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஆனால் இப்போதோ ஒரு சிறு இந்தியர் வணிகர் குழு ஆர்ப்பாட்டம் செய்தால் அதை குண்டர் கும்பல்தனம் என ஒதுக்கித் தள்ளப் பார்க்கின்றார்கள். அவர்களின் பிரச்சனைகள், ஆதங்கம் என்ன என்பதை விசாரித்து அறிந்து கொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமே ஒழிய, அவர்களை ஒரேயடியாக புறக்கணிக்கக்கூடாது” என்றும் ஜஸ்பால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் வேண்டுகோள் விடுத்தார்.
பக்காத்தான் கூட்டணி தங்களுக்கு உதவும் என நம்பிக்கை வைத்து, இந்தியர்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தனர், குறிப்பாக சிலாங்கூரில், எதிர்க்கட்சிகளுக்கு அபரிதமான ஆதரவை இந்தியர்கள் அளித்த காரணத்தால்தான் பக்காத்தான் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆனால் அதன் பலனை இந்தியர்கள் இப்போது அனுபவிக்கின்றார்கள் என்றும் ஜஸ்பால் சிங் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும் இந்திய வணிகர்களின் பால் பரிவு காட்டி அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முனைந்து வரும் பெட்டாலிங் ஜெயா மாநகரசபைத் தலைவர் (மேயர்) முகமட் அசிசி அவர்களின் முயற்சிகளைத் தான் பாராட்டுவதாகவும் ஜஸ்பால் சிங் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இதுவரையில் இந்தியர்கள் எதிர்நோக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் அமைதியான முறையில் அணுகி, அவர்களுடன் கலந்து பேசி தீர்த்து வைப்பதுதான் தேசிய முன்னணி அரசாங்கத்தின் கலாச்சாரமாக இருந்து வந்துள்ளதே தவிர, எப்போதுமே அவர்கள் இந்திய சிறுவணிகர்களை குண்டர் கும்பல்கள் என்று கூறி ஒதுக்கித் தள்ளியதே இல்லை” என்றும் ஜஸ்பால் சிங் சுட்டிக் காட்டினார்.