சென்னை- நடிகர் சங்கத்தில் தமக்கு எந்த பதவியும் தேவையில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் சங்கத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் விஷால், நாசர் ஆகியோரை உள்ளடக்கிய பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்தேர்தலில் பாண்டவர் அணிக்கு நடிகர் கமல் வெளிப்படையான ஆதரவு தெரிவித்திருந்தார். நடிகர் ரஜினி களத்தில் நின்ற இரு தரப்புக்கும் வாழ்த்து தெரிவித்து நடுநிலை வகித்தார்.
இந்நிலையில் கமல், ரஜினி இருவருக்கும் நடிகர் சங்கத்தில் கௌரவ பதவிகளை வழங்க புதிய நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி ரஜினி சங்கத்தில் கௌரவ தலைவராகவும், கமல்ஹாசன் கௌரவ பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
நடிகர் சங்க செயல்பாடுகளில் இவ்விருவரின் தொடர் பங்களிப்பை உறுதி செய்யவே இத்தகைய ஏற்பாட்டைச் செய்ய சங்கத்தின் புதிய நிர்வாகம் திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தில் தமக்கு எந்தவித பொறுப்பும் தேவையில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்துள்ள பேட்டியில், விஷால் அணிக்கு தமது ஆதரவு எப்போதும் உண்டு என்று கூறியுள்ளார்.
தேர்தலின் போது பிரச்சினைக்குரிய விவகாரமாக இருந்தது நடிகர் சங்க கட்டடம்தான் என்று குறிப்பிட்ட அவர், புதிய கட்டடம் நிச்சயமாக கட்டப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதை உறுதி செய்ய வேண்டியது புதிய நிர்வாகத்தின் முக்கிய கடமை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.