கோலாலம்பூர் – தற்போது வெளியாகும் அனைத்து திறன்பேசிகளும் இரு சிம்கார்டுகள் பொருத்தக் கூடியவையாகவே உள்ளன. திறன்பேசியிருந்தாலே வாட்சாப் பயன்பாடும் இருப்பது இயல்பு. அப்படி இரு சிம்கார்ட் கொண்ட திறன்பேசிகளில், வாட்சாப்பை ஏதாது ஒரு எண்ணில் தான் பயன்படுத்த முடியும் என்பது சற்றே சிக்கலான ஒன்று தான்.
ஒருவேளை அலுவலகத்திற்கு ஒரு எண்ணும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஒரு எண்ணும் பயன்படுத்துபவராக இருந்தால் கூடுதல் சிரமங்களை சந்திக்க நேரிடும். இதற்கான தீர்வாக உருவாக்கப்பட்டது தான் டிசா (Disa) செயலி. நாம் கணினியில் எப்படி இரு இயங்குதளங்களை பயன்படுத்துகிறோமோ, அதே போல் இந்த டிசா செயலியின் மூலம் இரு எண்களுக்கும் வாட்சாப்பை தனித்தனியாக பயன்படுத்த முடியும்.
அண்டிரொய்டு பயனர்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை, ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்தால், இரு எண்களில் வாட்சாப்பை கையாள்வது எளிதான காரியமாகிவிடும்.
இந்த செயலியை திறன்பேசியில் மேம்படுத்தியவுடன், தோன்றும் சாளரத்தில் ‘+’ குறியீட்டை தேர்வு செய்து, நாம் வாட்சாப் பயன்படுத்த வேண்டிய மற்றொரு எண்ணை சேர்க்க வேண்டும். அதன் பிறகு செய்ய வேண்டியவை அனைத்தும் வழக்கமான வாட்சாப் செயல்முறை தான்.
இந்த வாட்சாப் பயன்பாட்டில் இருக்கும் ஒரே குறை, இதில் வாட்சாப் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது என்பது தான்.