கோலாலம்பூர் – தேசிய உதவித்தலைவர் பதவிக்கான தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து சுந்தர் சுப்ரமணியம் பத்திரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை பின்வருமாறு:-
“என்னுடைய வேட்புமனு, மஇகா சட்டப்பிரிவு 59.1 -ன் கீழ் நிராகரிக்கப்பட்டது என்ற தகவலை அறிந்தேன். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நான் மத்திய செயலவையில் முறையீடு செய்யவுள்ளேன். தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக நான் அறிவித்த பின்னர், கடந்த ஒருவாரமாக, அதற்கான தகுதிக் கடிதத்தை வழங்குமாறு இடைக்கால பொதுச்செயலாளருக்கு கோரிக்கை விடுத்து வந்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.”
“தகுதிச் சான்றிதழை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, நேற்று 24-10-15 அன்று அதிகாரப்பூர்வ கடிதம் எழுதினேன். எனினும், அந்தக் கடிதத்திற்கு எந்த பதிலும் இல்லை. இன்று காலை தான் இடைக்கால பொதுச்செயலாளர் எனக்கு தகுதிக் கடிதத்தை வழங்கினார். இதனையடுத்து, எனது வேட்புமனுவை தகுதிக் கடிதத்துடன் தாக்கல் செய்தேன். எனினும், எனது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது”
“மத்திய செயலவையுடன் கலந்தாலோசிக்கும் முன்னர், என்னுடைய வேட்புமனு எதனால் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து எனக்கும் குழப்பமாக உள்ளது. இந்த முடிவு குறித்து மத்திய செயலவையுடன் முறையீடு செய்யும் அதே நேரத்தில், தற்போதைக்கு அவர்களது முடிவை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்.”
“மஇகா சட்டப்பிரிவு 59.1 -ன் கீழ் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முடிவில் உள்ள தெளிவின்மையை தீர்க்க, உடனடியாக அவசர மத்திய செயலவைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவை அறிய எனது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த விவகாரத்தின் முடிவு ஒருபுறம் இருக்க, நான் தொடர்ந்து நாடெங்கிலும் சென்று எனது ஆதரவாளர்களை சந்தித்து இந்த சமுதாயத்திற்கு சேவையாற்றுவேன்.” – இவ்வாறு சுந்தர் சுப்ரமணியம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.