Home Featured நாடு அப்துல் கலாமின் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா – பேரா இந்தியர் வர்த்தக சபை...

அப்துல் கலாமின் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா – பேரா இந்தியர் வர்த்தக சபை ஏற்பாடு!

750
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பேரா இந்தியர் வர்த்தக சபை ஏற்பாட்டில் எதிர்வரும் 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை, காலை மணி 10.00க்கு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Kalam

இது குறித்து ஏற்பாட்டுக் குழுவினர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

“அஞ்சல் தலை வெளியிடும் இந்நிகழ்ச்சியில் பேரா மாநில முதல்வர், டத்தோஸ்ரீ டிராஜா டாக்டர் சாம்ரி பின் அப்துல் காதிர் தலைமையேற்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரின் அறிவியல் ஆலோசகரும் அறிவியலாளரும் ஆன திரு வி.பொன்ராஜ், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.”

“ஈப்போ மாநகர மண்டபத்தில் நடைபெற இருக்கும் இந்த அரிய நிகழ்ச்சியில் திரு வி.பொன்ராஜ் மனிதகுலத்திற்கு, ஐயா கலாம் அவர்கள் பல துறைகளில் ஆற்றிய பங்குகளை விவரிக்கும் வண்ணத்தில் சிறப்புரை ஆற்றுவார். அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நடந்த  கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு அங்கத்துடன்  பல்வேறு துணை அங்கங்களும் நடைபெறும்.”

“அறிவியல் மாமேதை முனைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மறைவு இந்த உலகத்தையே துயரத்தில் ஆழ்த்தியிருந்தாலும், உலகளவில் போற்றப்படும் அந்த மாமேதையை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பதிக்கப்பட்ட அஞ்சல் தலை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்வதில் பேரா இந்தியர் வர்த்தக சபை பெருமிதம் கொள்கின்றது.”

Abdul kalam

“மறைந்த முனைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் உருவ பொறிக்கப்பட்ட அஞ்சல் தலைகளை “POS MALAYSIA” தேசிய அஞ்சலகத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே வெளியிடப் படுகிறது. மேலும், இந்த சிறப்பு அஞ்சல் தலைகள் பேரா இந்தியர் வர்த்தக சபையில் மட்டுமே கிடைக்கபெறும்.”

“ஐயா கலாம் அவர்களை மையமாகக் கொண்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் 70 விழுக்காடு மாணவர்களும் இளைஞர்களும் வருகை தந்து ஆதரவு அளிக்கப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐயா கலாமின் உயரிய சேவைகளை நினைவுகொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான மனிதவள மேம்பாட்டு அறவாரியம் தோற்றுவிக்கப்படும்.”

“ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்கள் முதல் மேற்கல்வி பயிலும் மாணவர்கள் வரை வாழ்வில் சாதனை புரிய ஊக்குவித்து, கலாம் அவர்களின் இளைஞர்கள் மீதான குறிக்கோளை நிறைவேற்றி பயனுள்ள தலைமுறையினரை உருவாக்கவும் இது செயல்படும். தனித்துவ மிக்க தலைமைத்துவத்தை வர்த்தக சமூகத்தினரிடையே ஊக்குவித்து, அறிவொளி மிக்க குடிமக்களின் வணிக வளர்ச்சிக்கானத் திட்டங்களை செயல்முறை படுத்த இவ்வரவாரியம் கைகொடுக்கும் என்பது திண்ணம்.”

Abdul Kalam 1

“வர்த்தகர் சபையின் தலைமையில், பேரா மாநிலத்தில் உள்ள அரசு சார்பற்ற இயக்கங்களின் ஆதரவில் இவ்விழா நடைபெறும். இலவசமாக நடத்தப்படும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்துகொள்ள 05-255 5558, 016-2558 558 அல்லது 016-3768659 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இதைத் தவிர்த்து, www.picc.org.my என்ற அகப்பக்கம் அல்லது “Perak Indian Chamber of Commerce” என்ற முகநூல் பக்கத்தில் மேல்விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.” இவ்வாறு அப்பத்திரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.