கோலாலம்பூர்- மாலத்தீவு அதிபரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி வேலை தொடர்பில் அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை கோலாலம்பூரில் வைத்து மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.
47 வயதான அந்நபரை ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் வைத்து புக்கிட் அமானின் தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.
சதி வேலையின் சூத்திரதாரி எனக் கருதப்படுபவரின் கூட்டாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு ஆடவர்கள், இரு பெண்கள் என மேலும் நால்வரும் இவருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மாலத்தீவு அதிபரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில், அந்நாட்டின் துணை அதிபர் அகமட் அடீப் (படம்) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட மாலத்தீவு ராஜதந்திரிக்கும், துணை அதிபர் அடீப்புக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட அந்த அதிகாரிக்கு தூதரக அடிப்படையில் வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகள், அந்தஸ்து அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாலத்தீவு அறிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“கைதான அதிகாரிக்கு கொலை முயற்சியில் பங்கிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட அனைவரும் அக்டோபர் 30ஆம் தேதி நாடு கடத்தப்பட்டுள்ளனர்” என காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் உறுதி செய்துள்ளார்.