Home Featured நாடு டி.மோகன்: “உங்களில் ஒருவன்! உங்களுக்காக ஒருவன்!” – உதவித் தலைவர்களில் ஒருவராக முடியுமா?

டி.மோகன்: “உங்களில் ஒருவன்! உங்களுக்காக ஒருவன்!” – உதவித் தலைவர்களில் ஒருவராக முடியுமா?

911
0
SHARE
Ad

Mohan T-with No 1 tagகோலாலம்பூர் – நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களில் உதவித் தலைவர்களுக்கான போட்டியில் களமிறங்கியுள்ள டத்தோ டி.மோகன் இந்த முறை தனக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக நேற்று செல்லியலில் இடம் பெற்ற  சிறப்பு நேர்காணலில்  தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு மஇகா தேர்தல்களிலும் உதவித் தலைவருக்கான போட்டி என்று வரும்போது முதலாவதாக வரப் போவது யார் என்ற பரபரப்பும், ஆரூடங்களும் எப்போதும் பேராளர்களிடையே விவாதமாகப் பரவும்.

மூன்று உதவித் தலைவர்களுள் ஒருவராக வருவதுதான் தனது குறிக்கோள் என்று டி.மோகன் தனது நேர்காணலில் தன்னடக்கத்தோடு தெரிவித்திருந்தாலும், இந்த முறை இருக்கும் அரசியல் சூழ்நிலை, அவரது தீவிரமான பிரச்சாரம் ஆகிய காரணங்களால், அவர் முதலாவது உதவித் தலைவராக வருவது கூட சாத்தியம்தான் என நம்பிக்கையோடு  கூறுகின்றார்கள் அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள்.

#TamilSchoolmychoice

இந்த முறை அதிர்ஷ்ட தேவதையின் பார்வையும் மோகன் பக்கம் திரும்பியுள்ளது போல் தோன்றுகின்றது!

Mohan T - PM -ஆம்! வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் குலுக்கல் எடுக்கப்பட்டதில் அவருக்கு வாக்குச் சீட்டில் இடம் பெறக் கிடைத்திருக்கும் எண்ணும் 1.

அதற்கேற்ப முதலாவது உதவித் தலைவராக மோகன் வாகை சூடுவார், அல்லது குறைந்த பட்சம் மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக வென்றுவிடுவார் என்று கூறும்  டி.மோகனின் ஆதரவாளர்கள், அதற்கான காரணங்களாக, கீழ்க்காணும் சாதகமான அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளனர்:

# 1 – மஇகா மறுதேர்தலுக்கான காரணகர்த்தா

MIC protest in front of PMO against ROS 16 Oct 201416 அக்டோபர் 2014ஆம் நாள் புத்ரா ஜெயாவில் சங்கப் பதிவகத்திற்கு எதிராக டி.மோகனின் தலைமையில் நடத்தப்பட்ட கண்டனப் பேரணி

கடந்த முறை 2013இல், உதவித் தலைவருக்கான தேர்தலில் களமிறங்கிய போது, “இப்போதுதான், இளைஞர் பகுதித் தலைவர் பதவியை வகித்து விட்டு வந்திருக்கிறாரே,   கொஞ்ச காலம் காத்திருக்கலாமே? ஏன் அவசரப்படுகின்றார்? முதலில் மத்திய செயற்குழுவுக்குப் போட்டியிடலாமே?” என்பது போன்ற பல முணுமுணுப்புகள் பேராளர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருந்ததை மோகனும் உணர்ந்திருந்தார்.

2013 தேர்தல் முடிவுகளிலும் அந்த முணுமுணுப்புகள் எதிரொலித்தன.

ஆனால், இந்த முறை நிலைமையோ தலைகீழ் – காரணம், இப்போது நடைபெறும் மறுதேர்தல்களின் காரணகர்த்தாவாகவே மோகன் பார்க்கப்படுகின்றார்.

Mohan T-handing Memo to PMO - ROS - 16 Oct 2015கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தின் முன்,  மஇகா தேர்தல்கள் தொடர்பில் செய்யப்பட்ட புகார்களுக்கு சங்கப் பதிவகம் முறையான பதிலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனு வழங்கப்பட்டபோது…

சங்கப் பதிவகத்திற்கு புகார்களை சமர்ப்பித்ததோடு ஓய்ந்து விடாமல், தொடர் போராட்டம் நடத்திய மோகன், ஒரு கட்டத்தில் ஏறத்தாழ ஒரு வருடமாகியும் சங்கப் பதிவகம் எந்தவிதப் பதிலையும் வழங்காத காரணத்தால், புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தின் முன்னால் ஏறத்தாழ ஆயிரம் பேர் கொண்ட மஇகா குழுவினரைத் திரட்டிச் சென்று கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினார்.

அதன் பின்னரே, சங்கப் பதிவகம் தனது முடிவுகளைத் தெரிவித்தது – மஇகாவுக்கு மறுதேர்தல்கள் நடத்தப்படும் என்று!

நியாயத்துக்காக போராடினார் – தேசியத் தலைவருக்கு எதிராக, கட்சியில் நலன்களுக்காக குரல் கொடுத்தார் – என்ற பிம்பம் இதன் மூலம் தற்போது மோகனுக்கு ஏற்பட்டுள்ளது.

# 2 – தேசியத் தலைவருடன் நெருக்கம்

Mohan T - subraஇப்போது நடைபெறும் கட்சித் தேர்தல்கள் முழுக்க முழுக்க தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவின் ஆதரவாளர்கள் ஏறத்தாழ 80 சதவீதத்தினரின் ஆளுமையின் கீழ் நடைபெறும் தேர்தலாகப் பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், பழனிவேலு-சுப்ரா இடையிலான தலைமைத்துவப் போராட்டத்தின் போது சுப்ராவுடன் இணைந்து போராடியவர் என்ற வகையிலும், சுப்ராவின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் ஆகியோரின் ஆதரவையும் இந்த முறை மோகன் பெற்றிருக்கின்றார்.

ஆனால், கடந்த முறையோ, பழனிவேலு ஆதரித்த மூன்று உதவித் தலைவர் வேட்பாளர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்ததால், மோகன் அப்போதைய தேசியத் தலைவர் பழனிவேலுவுக்கு எதிரான வேட்பாளராகப் பார்க்கப்பட்டார்.

# 3 – காலியான மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்குத்தான் போட்டி 

கடந்த முறை போட்டியில் இறங்கியபோது, ஏற்கனவே, உதவித் தலைவர்களாக இருந்த டத்தோ சரவணன், டத்தோ தேவமணி ஆகிய இருவரையும் எதிர்த்துப் போட்டியிட வேண்டிய சூழ்நிலை மோகனுக்கு இருந்தது.

Mohan T -functionஅதன் காரணமாக, கூடிய சீக்கிரம் மஇகாவில் மூத்தவர்களை வீழ்த்திவிட்டு பதவியை அடையப் பார்க்கின்றார் என்பது போன்ற ஒரு தோற்றம்,  மோகனுக்கு எதிராக பிரச்சாரத்தின் போது பேராளர்களிடையே எடுபட்டது.

அதே வேளையில், உதவித் தலைவர்களுக்குப் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களான டத்தோ சோதிநாதன், டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன், போன்றவர்கள் மோகனை விட கட்சியில் கூடுதலான அனுபவம் பெற்றவர்களாகப் பார்க்கப்பட்டனர்.

ஆனால்,இந்த முறை போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் ஏறத்தாழ சரிசம அரசியல் அனுபவம் உள்ளவர்களாக பேராளர்களால் பார்க்கப்படுகின்றனர்.

அது மட்டுமல்லாமல், மூன்று உதவித் தலைவர்களுக்கான பதவிகளும் தற்போது காலியாக இருக்கின்றன. எனவே, காலியாக இருக்கும் மூன்று உதவித் தலைவர் பதவிகளில் ஒன்றுக்குத்தான் குறி வைத்துப் போட்டியில் இறங்கியிருக்கின்றார் மோகன் என்பது அவருக்கு சாதகமான மற்றொரு அம்சம்.

# 4 – இளைஞர் பகுதியின் ஆதரவு

Mohan T - Sivaras -இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜ் மற்றும் இளைஞர் பிரிவின் தலைவர்கள் சிலருடன் மோகன்…

முன்னாள் இளைஞர் பகுதித் தலைவரான டி.மோகன் தனக்கு முன் இருந்த தலைவர்களைப் போல், இளைஞர் பகுதியை விட்டு ஒதுங்கியதும், இளைஞர் பகுதியை மறந்து விட்டு தனது சொந்த அரசியல் பாதையை வகுத்துக் கொள்ளவில்லை.

மாறாக, தனது கீழ் பணிபுரிந்த பல இளைஞர் பகுதித் தலைவர்களை அடுத்த கட்ட தலைவர்களாக உருவாக்கியிருக்கின்றார். அவர்களில் பலரை கிளைத் தலைவர்களாக்கி, அதன் மூலம் அவர்களைப் பேராளர்களாகவும் உருவாக்கியிருக்கின்றார் மோகன். இதன் காரணமாக இவர்களின் ஆதரவும் மோகனுக்குப் பக்கபலமாக நிற்கின்றது.

Mohan T -Khairy-இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் டி.மோகன்…

இன்றைக்கு இருக்கும் இளைஞர் பகுதியின் தலைவர் உட்பட, இளைஞர் பகுதியின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் மோகனின் ஆதரவாளர்கள்தான். அதன் காரணமாக, இளைஞர் பகுதியும், இளைஞர் பகுதியின் முன்னாள் உறுப்பினர்களும், மோகனுக்காக தீவிரப் பிரச்சாரத்தில் நாடெங்கிலும் இறங்கியுள்ளனர்.

இதுவும், மோகனின் வெற்றிக்குப் பக்கபலமாக இருக்கும் சாதக அம்சங்களில் ஒன்று எனக் கருதப்படுகின்றது.

# 5 – மகளிர் பகுதியின் ஆதரவு

இளைஞர் பகுதித் தலைவராக இருந்த காலத்தில் இருந்து, மகளிர் பகுதியினரோடு நெருக்கமாக இணைந்து பணியாற்றி வந்திருப்பவர் மோகன். தற்போது மகளிர் பகுதித் தலைவியாக இருக்கும் மோகனா முனியாண்டியின் ஒத்துழைப்போடு, மகளிர் பகுதியினரின் வாக்குகளையும் மோகன் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மகளிர் பகுதியின் மூலம் 35 பேராளர்கள் வாக்களிப்பார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

# 6 – புத்ரா மற்றும் புத்திரி பிரிவினரின் ஆதரவு

மகளிர் பிரிவைப் போன்றே, புதிதாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள புத்ரா மற்றும் புத்திரி பிரிவினரின் ஆதரவும் மோகனுக்குக் கிடைத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்ரா மற்றும் புத்ரி பிரிவிலிருந்து தலா 15 பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு வாக்களிப்பார்கள் என்பதால், முதலாவது உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இந்தப் பிரிவினரின் வாக்குகள் மோகனுக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

# 7 – டத்தோ எம்.சரவணன் அணியினரின் ஆதரவு

Mohan T-Subra-Saravananதேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா, டத்தோ எம்.சரவணன் ஆகியோருடன் நிகழ்ச்சி ஒன்றில் டி.மோகன்….

மஇகா தேசியத் துணைத் தலைவருக்கான போட்டியில் குதித்திருக்கும் டத்தோ எம்.சரவணன் தரப்பு ஆதரவாளர்களின் ஆதரவும் மோகனுக்கே முழுமையாகக் கிடைத்திருக்கின்றது என்பது மற்றொரு சாதக அம்சம்.

மஇகா கூட்டரசுப் பிரதேசத் தலைவராக இருக்கும் டத்தோ எம்.சரவணனின் ஆதரவு பேராளர்களின் வாக்குகளும் மோகனுக்கே கிடைக்கும் என்றும் கணிக்கப்படுகின்றது.

அடிமட்டத் தொண்டர்களிடையேயும், பேராளர்களிடத்திலும், தனது பழக்கவழக்கங்கள், பிரச்சாரங்கள் மூலம் சரவணன் பெரிதும் ஊடுருவியிருக்கின்றார் என்பது மறுக்க முடியாத உண்மை.

சரவணனின் கனவுத் திட்டமான ‘நாம்’ இயக்கத்தின் துணைத் தலைவராகவும் மோகன் பதவியேற்றுள்ளதால், சரவணனுக்குத் துணையாக நிற்கும் மோகனுக்கே தங்களின் ஆதரவை வழங்க சரவணனின் நெருக்கமான பேராளர்கள் முன்வந்துள்ளனர் என மஇகா பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

இதுவும் மோகனுக்குக் கிடைத்துள்ள மற்றொரு சாதக அம்சமாகும்.

# 8 – விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவு

காற்பந்து விளையாட்டுப் போட்டி ஒன்றின் தொடக்க விழாவின் போது டாக்டர் சுப்ராவுடன் டி.மோகன்…

மஇகாவில் இருப்பவர்களில் நேரம், காலம், செலவினம் பார்க்காமல், விளையாட்டுத் துறையில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருபவர் டி.மோகன்.

மலேசிய இந்தியர் விளையாட்டுப் பேரவை அமைப்பின் வழியும், மற்ற இயக்கங்களின் வழியும் இந்தியர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற பல முனைகளிலும் மோகன் பணியாற்றி வருவதும் பேராளர்களில், விளையாட்டு ஆர்வலர்களைக் கொண்ட ஒரு கணிசமான பிரிவினரின் ஆதரவை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

# 9 – எளிமை, அனைவரிடமும் பழகும் தன்மை

இன்றைய பேராளர்கள் முதிர்ச்சி பெற்றவர்கள். தேர்தலுக்கு மட்டும் தங்களை நாடி வருபவர்களை அவர்கள் எப்போதும் நிராகரித்தே வந்திருக்கின்றனர். வேட்பாளர்கள் எவ்வாறு கடந்த காலங்களில் நடந்து கொள்கின்றனர் என்பதை வைத்துத்தான் தேர்தல் காலங்களிலும் மஇகா பேராளர்கள் தங்களின் முடிவை மேற்கொள்கின்றனர் என்கின்றார் ஒரு மூத்த மஇகா அரசியல்வாதி.

Mohan T-with Childrenஅந்த வகையில் கட்சியில் மோகனின் அசுர வளர்ச்சிக்கும், அவர் அரசியல் ரீதியாக ஆழமாக வேரூன்றியிருப்பதற்கும் காரணம் அவரது எளிமையும், பழகும் தன்மையும்தான் என்கின்றனர் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள்.

அவரது போராட்ட குணத்தை அண்மையில் நடந்த கட்சிப் போராட்டங்களின்போது கண்டு கொண்ட பேராளர்கள், எல்லாக் காலங்களிலும் எளிமையோடும், அனைவரிடமும் முகம் சுளிக்காமல், பண்பு நலத்தோடும் பழகி வரும் அவரது தன்மையினாலும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக, அவர் மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாக்களிப்பார்கள் என்ற எண்ணமும் பரவலாக கட்சியில் ஏற்பட்டுள்ளது.

-மேற்கூறப்பட்ட காரணங்களால், சாதகமான அம்சங்களால், இந்த முறை டி.மோகன் எளிதாக மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பேராளர்களிடையே காணப்படுகின்றது.

“உங்களில் ஒருவன் – உங்களுக்காக ஒருவன்” என்ற பேராளர்களை சட்டென ஈர்க்கும் சுலோகத்தோடு இந்த முறை களம் காணும் மோகன், முதலாவது உதவித் தலைவராக வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதுதான் இரவு பகல் பாராது உழைத்து வரும் அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு! நம்பிக்கை!

-இரா.முத்தரசன்