கோலாலம்பூர்- அட்டர்னி ஜெனரல் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது டான்ஸ்ரீ அப்துல் கனி படேல் உடல்நலம் குன்றி இருந்ததாக பிரதமர் துறை அமைச்சர் நான்சி சுக்ரி (படம்) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கோபிந்த் சிங் டியோ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், உடல்நலம் குன்றியிருந்த காரணத்தினாலேயே அப்துல் கனி பதவியில் இருந்து விலக்கப்பட்டதாகவும் கூறினார்.
முன்னதாக உடல்நலம் குன்றிருப்பதாகக் கூறப்படும் அப்துல் கனி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஆரோக்கியமாக காணப்பட்டதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
“அவர் (அப்துல் கனி) பார்ப்பதற்கு நலமுடன் காணப்பட்டார். எனவே பிரதமர் தமது பதவியை துஷ்பிரயோகம் செய்து அட்டர்னி ஜெனரலை நீக்கினாரா? என்பது தொடர்பில் விளக்கம் பெற விரும்புகிறேன்” என்றார் கோபிந்த் சிங் டியோ.
இதற்குப் பதலளித்த நான்சி, “அப்துல் கனி குறித்து இனிமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்றார்.
இதையடுத்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நான்சி, “ஆரோக்கியமான ஓர் அட்டர்னி ஜெனரலே எங்களுக்குத் தேவை. அப்துல் கனி அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில்தான் பணியாற்றுகிறார். ஆனால் அவரது பொறுப்பு மாறியுள்ளது” என்றார்.