கோலாலம்பூர் – (டத்தோ எம்.சரவணன் செல்லியலுக்கென வழங்கிய சிறப்பு நேர்காணல் இந்த மூன்றாம் பாகத்துடன் நிறைவு பெறுகின்றது)
கேள்வி: துணைத் தலைவருக்கான போட்டியில் ஒரு வேட்பாளர் என்ற முறையில் உங்களின் தனித்துவமாக எதைப் பார்க்கின்றீர்கள்?
சரவணன் :
மஇகாவில் உள்ள தலைவர்களில் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, சமயம் ஆகிய அம்சங்களில் எனக்குள்ள ஈடுபாடும், ஆற்றலும், அனுபவமும்தான் எனது தனித்துவமாக நான் பார்க்கின்றேன். இவைதான் என்னை மற்ற தலைவர்களில் இருந்து என்னை வேறுபடுத்திக் காட்டுவதாகவும், நான் நினைக்கின்றேன்.
இந்த மொழி, இலக்கிய ஈடுபாடுகளும், ஆர்வமும் அரசியலுக்காகவோ, அல்லது பேராளர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காகவோ நான் வளர்த்துக் கொண்டவை அல்ல!
நான் படித்த தமிழ்ப் பள்ளிக் கல்வியின் வழியாக எனக்குக் கிடைத்தவை. என் வாழ்க்கையோடும், என் உணர்வுகளோடும் பின்னிப் பிணைந்தவை இந்த அம்சங்கள்.
இவற்றின் துணையோடு தமிழர்களிடத்தில் மஇகாவுக்கென கூடுதலான ஆதரவைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கையையும் கொண்டுள்ளேன்.
எனது இந்த சிறப்புக்குரிய அம்சங்கள் பேராளர்களிடத்தில் எனக்கு வரவேற்பையும் கூடுதல் செல்வாக்கையும், வாக்குகளையும் பெற்றுத் தரும் என்றும் எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி: இன்று கட்சிக்கு வெளியே நிற்கும் கணிசமான மஇகா கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் குறித்து உங்களின் முடிவு என்ன?
சரவணன்: தற்போது நடத்தப்பட்டு வரும் கட்சித் தேர்தல்கள் சங்கப் பதிவகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படுபவை. குறிப்பாக, 2012ஆம் ஆண்டு வரை பதிவுபெற்ற கிளைகள்தான் இதில் பங்கு கொள்ள முடியும் என்பது சங்கப் பதிவகத்தின் விதியாதலால், அதன் காரணமாக பல கிளைகள் பங்கு பெற இயலவில்லை. ஆனால், அவர்கள் கட்சிக்குள்தான் இன்னும் இருக்கின்றார்கள்.
வேறு பல கிளைகள், இன்னொரு தலைவரை ஆதரிப்பதால் வெளியே இருக்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரை, மஇகாவினர் அனைவரும் மீண்டும் கட்சிக்கு திரும்பி வரவேண்டும் என்பதுதான் எனது கொள்கையாகக் கொண்டிருக்கின்றேன். அப்போதுதான் கட்சியும் பலம் பெறும் என்றும் நம்புகின்றேன்.
எனவே, கட்சிக்கு வெளியே இருப்பவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர என்னால் இயன்ற அனைத்தையும் தேசியத் தலைவருடன் இணைந்து செய்வேன். பாடுபடுவேன்.
அவர்கள் அனைவரும் எந்தவித நிபந்தனையுமின்றி கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. தேசியத் தலைவரும் இதே சிந்தனையில்தான் இருக்கின்றார் என்றும் நினைக்கின்றேன்.
-இரா.முத்தரசன்