கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் யார் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பெறுகின்றார்கள் என்பதை நிர்ணயிப்பதற்காக பலமுறை வாக்கு மறு-எண்ணிக்கை நடைபெற்றன.
டத்தோ வி.எஸ்.மோகன் தோல்வி அடைந்துவிட்டார் என்பதும், டத்தோ ஜஸ்பால் சிங் மூன்றாவது இடம் என்பதும் உறுதியாகி விட்ட நிலையில், டத்தோ டி.மோகனும், டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் தங்களுக்கிடையில் யாருக்கு முதல் இடம் என்பதை நிர்ணயிக்க மீண்டும் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து ஆறுதடவைகள் வாக்குகள் மறு-எண்ணிக்கை நடத்தப்பட்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இறுதியாக, பிரதமர் கலந்து கொண்ட அதிகாரபூர்வ திறப்பு விழா நடைபெற்று முடிந்து, பிரதமர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினரின் தேநீர் விருந்திலும் கலந்து கொண்டு மாநாட்டு மண்டபத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற பின்னர், மாலை 7 மணிக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை வாக்குகள் எண்ணப்பட்டன.
அதன் படி அதிக வாக்குகள் பெற்று முதல் உதவித் தலைவராக விக்னேஸ்வரன் அறிவிக்கப்பட்டார். அந்த வாக்கு விவரங்கள் பின்வருமாறு:-
- டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் – 1,141
- டத்தோ டி.மோகன் – 1,138
- டத்தோ ஜஸ்பால் சிங் – 1,072
- டத்தோ வி.எஸ்.மோகன் – 768