சென்னை – திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய்லாமாவை உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் கவுதமி இருவரும் நேற்று நேரில் சென்று சந்தித்தனர்.
அந்தச் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இன்று காலை நான் தலாய்லாமாஜியை சந்தித்தேன். அவரது நெகிழ்ச்சியையும், நோக்கத்தையும் கண்டு வியந்தேன். காந்திஜியின் ரசிகனாக இருந்தாலும் தலாய்லாமாவின் ஆர்வலராக இருக்கலாம் என உணர்ந்தேன். ஒரு பகுத்தறிவாளன், ஆன்மிக நாட்டம் இல்லாதவனாக இருந்தாலும் அவருடனான இந்த சந்திப்பு அர்த்தமுள்ளதாய் அமைந்தது.
ஆன்மிகத்தில் எனக்கில்லாத நாட்டமும், சினிமா மீது அவருக்கு இல்லாத நாட்டமும் எங்களை இணைத்தது. ‘நான் எந்த ஒரு படமோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியோ பார்த்ததேயில்லை’ என்று புன்னகையுடன் கூறினார். அதற்கு பதிலாக அகில உலகம் முழுவதும் இந்தியாவின் யுக்தியான அகிம்சையை பயன்படுத்தி தத்துவங்களை பரப்பி வருகிறேன் என்று கூறினார்.
எனக்கு அகிம்சையில் நம்பிக்கை உள்ளது. விரைவில் அதனை படமாக்குவேன் என்று கூறினார் கமல்ஹாசன். சம்மந்தமே இல்லாத இரு வேறு எண்ணங்களை கொண்ட எங்களின் கருத்துப் பரிமாற்றம் சிறப்பாக அமைந்தது. இறுதியில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் ஜெயின் தத்துவமான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” கவிதையை எனக்கு நினைவுப்படுத்தினார் என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.