சென்னை – தமிழகத்தை காலம் காலமாக ஆண்டு வரும் திமுக-அதிமுக கட்சிகளை ஓரம் கட்டி விட்டு புதிய அரசியலை உருவாக்கும் முயற்சியில் ஏனைய கட்சிகள் ஈடுபட்டுள்ளதற்கான அறிகுறிகள் தெளிவாக தெரிவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் முன்னோட்டமாக வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிகவும், வாசனின் தமாகாவும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக இரு கட்சி வட்டாரங்களும் பெரிய அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தத் துவங்கிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. விஜயகாந்த், திமுக-அதிமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என தெளிவாக அறிவித்து விட்டதால், முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மக்கள் நலக் கூட்டணியினருடன் கைகோர்க்க அவர் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவிடமிருந்து எப்படியும் அழைப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருந்த வாசனும் ஏமாற்றம் அடைந்துள்ளதால், அவரும் இந்த கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கட்சிகளின் தற்போதய முடிவு தேர்தல் வரை நீடித்தால் தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் மாற்றங்கள் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது:-
“ஒருவேளை மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தால் அந்த கூட்டணி, மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது. எனினும், அது ஆட்சியில் அமரவைக்குமா? என்பது சந்தேகமே. இதனால் பெரிய அளவில் பாதிப்பை திமுக சந்திக்கும். திமுகவை தனிமைப்படுத்தும் இந்த கூட்டணியால், அக்கட்சி தோற்கடிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளளன. முன்னை விட அசுர பலத்துடன் விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை தக்க வைக்கலாம். அதன் பிறகு, தேமுதிக இரண்டாவது பெரிய கட்சியாக மாறும்” என்று தெரிவித்துள்ளனர்.
இரு பெரும் கட்சிகளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ள நிலையில், சரியான முடிவை விஜயகாந்த் எடுத்தால், அடுத்த சில வருடங்களில் அவரின் முதல்வரும் கனவு நிறைவேற வாய்ப்புள்ளது.