கோலாலம்பூர் – முன்பெல்லாம் தெரியாத இடங்களுக்கு நாம் பயணப்பட நேர்ந்தால், ஒவ்வொரு இடமாக நின்று நின்று விவரம் அறிந்தவர்களிடம் தகவல் கேட்போம். இந்த செயலை முற்றிலும் முடிவிற்கு கொண்டு வந்த பெருமை ‘கூகுள் மேப்பையே’ (Google Map) சாரும். ஒரு திறன்பேசி, இணையம், கூகுள் மேப் இருந்தால் உலகத்தின் எந்த மூலைக்கும் சென்றுவிட முடியும்.
இந்நிலையில், இதில் மிக முக்கிய மாற்றம் ஒன்றை கூகுள் கொண்டு வந்துள்ளது. கூகுள் மேப்பில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இனி இணையம் இல்லாமலேயே இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாம் பயணப்பட வேண்டிய இடங்கள் முதல் திசைகள் வரை அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த இணையம் தேவையில்லை.
இணையம் இருக்கும் போது அதனை பயன்படுத்திக் கொள்ளும் கூகுள் மேப், இணையம் இல்லாத பொழுதோ அல்லது இணைய இணைப்பு சரியாக இல்லாத பொழுதோ தனிச்சையாக ஆப்லைன் மோடிற்கு (Offline Mode) மாறும் படியான மேம்பாடுகளை செய்து கூகுள், பயனர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஆனால் இதில் குறிப்பிட வேண்டிய ஒன்றே ஒன்று, இந்த வசதி தற்போது ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் தான் அறிமுகமாகி உள்ளது. அண்டிரொய்டு பயனர்களுக்கு சிறிது கால தாமதம் ஆகலாம்.