கோலாலம்பூர் – கணினிகளில் ஃபயர்பாக்ஸ் உலாவி (FireFox Browser)-ஐ பயன்படுத்திய ஆப்பிள் பயனர்கள், அதனை தங்கள் ஐஒஎஸ் கருவிகளில் பயன்படுத்த முடியாமல் ஏமாற்றத்திற்கு ஆளாகி வந்தனர். இதனை உணர்ந்த ஆப்பிள் மற்றும் மொசில்லா நிறுவனங்கள் தங்கள் முரண்பாடுகளை மறந்து இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளன.
ஆப்பிளின் தர கட்டுப்பாடுகளில் ஏற்பட்ட முரண்பாட்டால், இதுநாள் வரை ஃபயர்பாக்ஸ் உலாவி ஐஒஎஸ் கருவிகளில் மேம்படுத்தப்பட முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தி வெர்ஜ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், “மொசில்லா நிறுவனம் ஆப்பிளின் தர நிர்ணயக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள சம்மதித்துள்ளது. இனி ஐஒஎஸ் கருவிகளில் ஃபயர்பாக்ஸ் உலாவியை பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஆப்பிளின் ஐடியூன் ஆப் ஸ்டோரில் ஃபயர்பாக்ஸ் உலாவியை இலவசாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.