வாஷிங்டன் – உலக அளவில் செயல்படும் மிகப் பெரிய கடத்தல் கும்பலால், சிறு வயதிலேயே கடத்தப்பட்ட மெக்சிக்கோவை பெண் ஒருவர், சுமார் 4 ஆண்டுகள் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டு, பின்னர் அதிருஷ்டவசமாக காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்கள் குறித்து விவரிக்கும் கர்லா ஜசின்டோ என்ற அந்த 23 வயதுப் பெண், தான் இதுவரையில் 43,000 முறை கற்பழிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
தனக்கு 5 வயதாக இருக்கும் போதே உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறும் அவர், அதன் பின் தனது 12 வயதில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் சில சமூக விரோத கும்பலிடம் சிக்கிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 20 முதல் 30 ஆண்கள் தன்னைக் கற்பழித்ததாகவும், அவர்கள் கூறுவதைத் தான் செய்யத் தவறினால் இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
அது போன்ற சமயங்களில், தன்னை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று கண்களை மூடிக் கொண்டதாகவும், தான் அழுவதைக் கண்டு அவர்கள் சிரித்ததாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை உலகிற்கு வெளிப்படையாகக் கூறி வரும் கர்லா, வாட்டிகன் போப் ஆண்டவரைச் சந்தித்து தனது வேதனைகள் அனைத்தையும் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் கலந்து கொண்ட அவர், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மனிதக் கடத்தல் ஒரு முக்கியத் தொழிலாக வளர்ந்து வருவதை சுட்டிக் காட்டியுள்ளார்.
கர்லா ஜசின்டோவின் பேட்டியை கீழே காணலாம்:-
https://www.youtube.com/watch?v=Kc5WJt3WfQU