Home Featured கலையுலகம் “மறைந்த நடிகை ஸ்ரீவித்யா எனது காதலிதான்” – கமலஹாசன் பகிரங்க ஒப்புதல்!

“மறைந்த நடிகை ஸ்ரீவித்யா எனது காதலிதான்” – கமலஹாசன் பகிரங்க ஒப்புதல்!

1675
0
SHARE
Ad

Aboorva Ragangal posterசென்னை – கே.பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தை சினிமா இரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கதையம்சத்தாலும், பாலசந்தரின் நுணுக்கமான இயக்கத் திறமையை எடுத்துக் காட்டியதாலும் தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுவது ‘அபூர்வ ராகங்கள்’.

சூப்பர் ஸ்டாரின் முதல் படமும் இதுதான் என்பது இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சம்.

இந்தப் படத்தில் ஸ்ரீவித்யாவும், கமலஹாசனும் இணைந்து நடித்திருந்தனர். அந்த கால கட்டத்தில் இருவரும் ஏறத்தாழ ஒத்த வயதினர்களாக இருந்தாலும், உருவ அமைப்பு, முகவெட்டு காரணமாக, பதின்ம வயது மகளுக்குத் தாயாக அந்தப் படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீவித்யா. நடுத்தர வயதுடைய அவரைக் காதலிக்கும் இளைஞனாக கமல் நடித்திருந்தார்.

#TamilSchoolmychoice

Srividya (late)அப்போதிருந்தே இருவரும் சொந்த வாழ்க்கையிலும் காதலிக்கின்றார்கள் என்ற கிசுகிசு செய்திகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால்,இருவரும் அதை ஒப்புக் கொண்டதும் இல்லை. மறுத்ததும் இல்லை.

மற்றொரு திருமணப் பந்தத்தில் பின்னர் இணைந்த ஸ்ரீவித்யா (படம்) அதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட, அது விவாகரத்தில் முடிந்தது.

பல படங்களில் நடித்த அவர், உடல் நலம் குன்றி தனது 53வது வயதில் 2006ஆம் ஆண்டில் காலமானார்.

நேர்காணலில் ஸ்ரீவித்யா காதலி என ஒப்புக் கொண்ட கமல்

இந்நிலையில் தற்போது முதன்முறையாக ஸ்ரீவித்யாவுடனான தனது உறவு குறித்து மனம் திறந்துள்ளார் கமல்.

Aboorva Ragangal-Kamalhassan-Srividyaதொலைக்காட்சி பேட்டியின்போது, கமலிடம் டிடி காட்டிய புகைப்படம் இதுதான்…

தீபாவளியன்று, தமிழகத்தின் விஜய் தொலைக்காட்சியில் ‘காப்பி வித் டிடி’ நேர்காணல் நிகழ்ச்சியில் தோன்றிய கமலிடம் சில புகைப்படங்களைக் காட்டி அவருக்கு மனதில் என்ன தோன்றுகின்றது என்பதைக் கூற வேண்டும் என நிகழ்ச்சித் தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷனி கேட்டார்.

அவர் காட்டிய புகைப்படங்களில் ஒன்றில் அபூர்வ ராகங்கள் படத்தில் கமலும் ஸ்ரீவித்யாவும் தோன்றிய காட்சி இடம் பெற்றிருந்தது.

அந்தப் புகைப்படத்தைப் பற்றி கமல் விளக்க முற்பட்டபோது, “உங்களின் அன்புத் தோழி…” என்று டிடி குறிப்பிட, “இல்லை…இல்லை…காதலிதான். இதில் ஒளிவுமறைவெல்லாம் ஒன்றுமில்லை. எங்களுக்கிடையில் காதல் கடைசிவரையில் இருந்தது. ஆனால் அது கல்யாணத்தில் முடியவேண்டும் என்ற அவசியம் இருந்ததில்லை” என்று கூறினார்.

இத்தனை காலமாக, பலரும் வதந்தியாகவும், தகவல் ஊடகங்கள் கிசுகிசுவாகவும் வெளியிட்டு வந்த ஒரு தகவலை முதன் முறையாக இப்போதுதான் – அதுவும் ஸ்ரீவித்யாவின் மறைவுக்குப் பின்னர் கமல் ஒப்புக் கொண்டுள்ளார்.

“ஸ்ரீதேவிக்கும் எனக்கும் இடையில் காதல் இருந்ததில்லை” – கமல்

Kamal and Srideviஅதே பேட்டியில் பல படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த ஸ்ரீதேவி குறித்தும் குறிப்பிட்ட கமல், “எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் ஏதோ இருந்ததாக பலர் கூறியிருக்கின்றார்கள். எழுதியிருக்கின்றார்கள். ஆனால் அவர் எனக்குப்  பள்ளித் தோழி மாதிரிதான். அவர் தலையில் எல்லாம் குட்டியிருக்கின்றேன். இன்றைக்கும் என்னைப் பார்த்தால் ஸ்ரீதேவி கொஞ்சம் பயத்தோடு தள்ளியிருந்துதான் பேசுவார். ஸ்ரீவித்யாவிடம் இருந்த உறவு எனக்கு ஸ்ரீதேவியிடம் இருந்ததில்லை. ஆனாலும் பலரும் நம்ப மாட்டார்கள். அதுதான் சினிமாவின் சக்தி” என்றும் கமலஹாசன் அந்தப் பேட்டியில் டிடியிடம் கூறினார்.

-செல்லியல் தொகுப்பு