ஃபூசோவ் (சீனா) – ஊக்கமருந்து உட்கொண்ட குற்றச்சாட்டில் சில மாதங்கள் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருந்த பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சோங் வெய், தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிறப்பாக விளையாடி வருகின்றார். இன்று நடைபெற்ற சீனா பொது பூப்பந்து இறுதிப் போட்டியில் முதல் நிலையில் வெற்றிவாகை சூடி மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
சீனாவின் விளையாட்டாளர் சென் லோங்கை இரண்டே ஆட்டங்களில், 50 நிமிடங்களில் தோற்கடித்து லீ சோங் வெய் இந்தப் பட்டத்தை வென்றார்.
இதற்கு முன்னர் 2002ஆம் ஆண்டில்தான் மலேசியா இந்தப் பட்டத்தை வென்றது. வோங் சூங் ஹான் அப்போது இந்தப் பட்டத்தை மலேசியாவுக்காக வென்று தந்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இந்தப் பட்டத்தை ஒரு மலேசியர் மீண்டும் வெல்ல முடிந்திருக்கின்றது.
இந்தியாவின் செய்னா நெஹ்வால் இறுதி ஆட்டத்தில் தோல்வி
இருப்பினும் பெண்கள் பிரிவில் சீனாவே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவின் முன்னணி ஆட்டக்காரரான செய்னா நெஹ்வால் இறுதி ஆட்டத்தில் சீனாவின் லீ சூருய்யிடம் தோல்வி கண்டார்.
இரட்டையர் ஆட்டங்களிலும், கலப்பு இரட்டையர் ஆட்டங்களிலும் சீன நாட்டினரே இந்த பொது பூப்பந்து போட்டியில் வென்றனர்.