பாரிஸ்: வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை பிரெஞ்சு காவல்துறையினர் இதுவரை 7 பேரை விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர்.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் பிரெஞ்சு அதிரடிப் படையினர்….
கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதலை நடத்தி உயிரிழந்த 7 தற்கொலைப் படையினரில் ஒருவனான 29 வயது பிரெஞ்சு குடியுரிமை கொண்ட ஓமார் இஸ்மாயில் மொஸ்டிஃபாய் என்பவனுக்கு இந்த 7 பேரும் உறவினர்கள் ஆவர். ஓமார் இஸ்மாயில் அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பதோடு சிறிய அளவிலான குற்றங்களைச் செய்த பின்னணியையும் கொண்டவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிசில் நடந்த அந்தத் தாக்குதலில் இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஓமார் இஸ்மாயில் தீவிரவாத இஸ்லாமியக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்ததை 2010ஆம் ஆண்டில் பிரெஞ்சு காவல் துறையினர் கண்டுபிடித்திருந்தனர்.
ஆனால், கடந்த 2013 குளிர்காலத்தின்போது அவன் சிரியாவுக்குப் பயணம் மேற்கொண்டான் எனவும் அப்போதுதான் அவனுடைய தொடர்புகளை பிரெஞ்சு காவல் துறை இழந்தது என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
“ஓமார் இஸ்மாயில் என்ற இந்த மனிதன் தற்கொலைப் படைவீரனாக உருமாறக் காரணமாக இருந்தது எது என்பதைக் கண்டுபிடிப்பதே எங்களின் நோக்கம்” என பிரெஞ்சு காவல் துறை அறிவித்துள்ளது.
ஓமார் இஸ்மாயிலுக்கு ஒரு சிறுவயது மகளும் இருக்கிறாள். அவர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ஓமார் இஸ்மாயிலின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலைத் தொடர்ந்து ஓமார் இஸ்மாயிலின் சகோதரரும், தந்தையும், மற்ற சில உறவினர்களும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.