சென்னை – கனமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. சாலையில் தேங்கியுள்ல நீரில் வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு பல இடங்கள் அபாயக்கட்டத்தில் உள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. உணவிற்குத் தேவையானவற்றைக் கூட வாங்க வெளியே செல்லாமல் மக்கள் பெரிதும் பாதிகப்பட்டுள்ளனர்.
15 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 28-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த 4 நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது. சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம், கழிவுநீர் கலந்து பாய்ந்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் வந்து விட்டதால், வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டனர். தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.