பாரிஸ்: தீவிரவாதத் தாக்குதலையடுத்து பிரான்ஸ் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட போலோ வகை காரில் ஏராளமான ஏகே 47 ரக துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியே பிரான்சில் தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிசில் உள்ள இசையரங்கம் ஒன்றில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கு மட்டும் 89 பேர் பலியாகினர். இச்சமயம் அக்குறிப்பிட்ட காரில் இருந்தபடியும் தீவிரவாதிகள் தொடர்ந்து சுட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். அந்தக் கார் பெல்ஜியம் நாட்டு பதிவு எண்ணைக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெல்ஜியத்தில் இருந்து ஒரு பயண நிறுவனம் மூலம் அந்தக் கார் பிரான்ஸ் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் பின்னர் பிரான்சில் உள்ள ஒருவருக்கு அந்தக் கார் வாடகை அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தக் காருடன் தொடர்புடைய சிலரை பெல்ஜியம் அரசு கைது செய்துள்ளது. மேலும், தாக்குதல் நடந்தபோது பாரிஸ் நகரில் இருந்த ஒருவர், உடனடியாக பெல்ஜியம் திரும்பியுள்ளார். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் பாரிசில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் பெல்ஜியத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பது பின்னர் தெரியவந்தது.
இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆம்ஸ்டெர்டாம்-பாரிஸ் நகரங்களுக்கு இடையே ஓடும் ரெயிலின் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்திலும் பெல்ஜியத்தில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
தற்போது வெள்ளிக்கிழமை பாரிசில் நிகழ்த்தப்பட்ட மூன்றாவது தீவிரவாத செயலிலும் பெல்ஜியம் நாட்டவர்களுக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.