பாரிஸ் – பிரான்ஸ் நாட்டின் காவல் துறையினர் ஏற்கனவே எச்சரித்திருந்தபடி, பாரிஸ் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பயங்கரவாதம் இன்னும் தொடர்கின்றன.
பாரிசின் புறநகர்ப் பகுதியில் செயிண்ட் டெனிஸ் என்னும் பகுதியில் இன்னும் பிடிபடாமல் இருக்கும் தீவிரவாதி ஒருவனைத் தேடிப் பிடிக்கும் வேட்டையில் பிரெஞ்சு காவல் துறையினர் முனைந்திருந்த வேளையில், உடல் முழுக்க வெடிகுண்டுகளைக் கொண்ட கவசத்தை அணிந்திருந்த பெண் ஒருத்தி, அந்த வெடிகுண்டுகளை தானே வெடிக்கச் செய்து கொண்டு உயிரிழந்தாள்.
தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகளோடு நடந்த சண்டையில் இந்தத் தற்கொலைப்படை தாக்குதல்காரியுடன் இதுவரை மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாரிசில் நடத்தப்படவிருந்த தாக்குதல்களை இறுதி நேரத்தில் முறியடித்துவிட்டதாக பிரெஞ்சு காவல் துறையினர் நம்புகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு (நவம்பர் 13) பாரிசில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவன் எனக் கருதப்படும் அப்டெல்ஹமித் அபவுட் என்பவனைக் குறிவைத்து இந்தத் தேடுதல் வேட்டைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
கொல்லப்பட்ட இரண்டு ஆண்களில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அப்டெல்ஹமித்தும் ஒருவனா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதிரடித் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட செயிண்ட் டெனிஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தைக் குறி வைத்து பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
அந்த தேவாலயத்தின் கதவுகள் மூடப்பட்டிருப்பதாகவும், உள்ளே யாராவது இருக்கின்றனரா, அல்லது உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதா என பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் ஆலோசித்து வருவதாகவும், மலேசிய நேரப்படி இன்று மாலை 6.50 மணியளவில் சிஎன்என் தொலைக்காட்சி அறிவித்தது.