ஷா ஆலம்- டான்ஸ்ரீ பட்டம் பெற்றுள்ள வர்த்தகர் ஒருவரின் சகோதரியை கடத்திச் சென்றதாக நம்பப்படும் பதினான்கு சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற இந்தக் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவரும் கைதானதாக சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ அப்துல் சமா மட் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த 10ஆம் தேதி அன்று அக்குறிப்பிட்ட வர்த்தகரின் சகோதரி கிள்ளானில் உள்ள மரபு வழி சிகிச்சை மையம் ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது தலைக்கவசம் அணிந்த மூன்று ஆடவர்கள் அங்கு வந்துள்ளனர்.
பின்னர் திடீரென அந்த மையத்தின் ஊழியர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கிய அம்மூவரும் டான்ஸ்ரீ 63 வயது சகோதரியை கடத்திச் சென்றுள்ளனர்.
“கடத்தலில் ஈடுபட்டவர்கள் கத்தியும் போலி துப்பாக்கியையும் காண்பித்து டான்ஸ்ரீ சகோதரியையும் சிகிச்சை மைய ஊழியர்களையும் மிரட்டி உள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட பெண்மணி 6 நாட்கள் அவர்களின் பிடியில் இருந்தார். பின்னர் கடத்தல்காரர்கள் கோரியபடி 2 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகையாக செலுத்தப்பட்டதும் அவர் விடுவிக்கப்பட்டார்.” என்றும் அப்துல் சமா மட் தெரிவித்துள்ளார்.
“இதையடுத்து சிறப்புப் படை அமைக்கப்பட்டு கடத்தல்காரர்கள் தேடப்பட்டு வந்தனர். செவ்வாய்க்கிழமை செராசில் வைத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாலான் துன் ரசாக்கிலும் ஜாலான் துரைசாமியிலும் வைத்து 6 ஆடவர்களும் 4 பெண்களும் கைது செய்யப்பட்டனர். இரு சம்பவங்களிலும் சேர்த்து 722,710 ரிங்கிட் ரொக்கமும், கைபேசிகளும் போலித் துப்பாக்கிகளும் 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பணம் பறிக்கும் நோக்கத்திலேயே இந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேறி உள்ளது. கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட ரியல் எஸ்டேட் தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று அப்துல் சமா மட் மேலும் கூறினார்.