நியூயார்க்- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பாபி ஜிண்டால் திடீரென அறிவித்துள்ளார். அமெரிக்க வாழ் இந்தியரான 44 வயது பாபி ஜிண்டால் (படம்), தற்போது லூசியானா மாகாணத்தின் ஆளுநராக உள்ளார்.
அவரது நிர்வாகத் திறமையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர். எனவே பாபி ஜிண்டால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெயரையும் புகழையும் பெறுவார் என வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது.
அவரைப் பற்றி அமெரிக்க ஊடகங்கள் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. குடியரசுக் கட்சியின் சார்பாக அவர் அதிபர் தேர்தலில் களம் இறங்குவார் என்று கூறப்பட்டது.
எனினும் அக்கட்சி சார்பாக முன்னாள் அமெரிக்க அதிபர்களான ஜார்ஜ் எச். டபிள்யு புஷ்ஷின் மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரருமான ஜெப் புஷ் உட்பட மேலும் பத்து பேர் அதிபர் தேர்தலில் போட்டியிட பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி, முன்னேறி வந்தால் மட்டுமே பாபி ஜிண்டாலுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.
இந்நிலையில், கட்சியினரிடையே ஆதரவு திரட்டும் பாபி ஜிண்டாலின் முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை என்றும், மக்களிடையே அவரது பிரச்சார யுக்திகள் எடுபடாமல் போனது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தேர்தல் பிரச்சாரத்துகான நிதி திரட்டும் முயற்சியிலும் மற்றவர்களை விட அவர் பின்தங்கியே இருக்கிறார் என அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்து வந்தன. அமெரிக்கத் தேர்தலைப் பொறுத்தவரை எந்த வேட்பாளரால் அதிகமான தேர்தல் நிதியைத் திரட்ட முடிகின்றதோ, அவரே முன்னணி வேட்பாளராகக் கருதப்படுவார்.
அந்த வகையில், குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்களில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரர் ஜெப் புஷ்தான் செல்வாக்கு மிக்க குடும்பப் பின்னணி காரணமாக, மிக அதிகமான தேர்தல் நிதியைத் திரட்டியிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.
இத்தகைய சூழ்நிலையில், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக பாபி ஜிண்டால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில், இது தனக்கான நேரம் அல்ல என்பதை உணர்ந்திருப்பதாகவும், பொறாமை மற்றும் பிரிவினைவாத அரசியலில் நம்பிக்கை வைக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் வளர்ச்சிப் பாதையை நோக்கி குடியரசு கட்சி முன்னேறிச் செல்ல வேண்டும். எனவே, இந்தப் போட்டியில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்” என்று பாபி ஜிண்டால் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அவரது லூசியானா மாநில ஆளுநர் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.