புதுடெல்லி- அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து நிதி உதவி செய்யப்பட்டதாக சிபிஐ முன்னாள் அதிகாரியான நீரஜ் குமார் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லி காவல்துறை ஆணையராகவும் பதவி வகித்து அவர், டயல் டி ஃபார் டான் என்ற புத்தகத்தில் தாவூத் இப்ராகிம் குறித்தும், பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்க தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதியின் பெயர் முகமது அட்டா. இந்த தீவிரவாதிக்கு, உமர் ஷெய்க் என்ற மற்றொரு தீவிரவாதி பணம் உதவி செய்துள்ளார். உமர் ஷெய்க்கிற்கு சுமார் ரூ.49 லட்சத்தை, கொல்கத்தாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய, அப்டாப் அன்சாரி கொடுத்துள்ளார்.
“இந்தியாவை சேர்ந்த பார்த பிரதிம் ராய் பர்மன் என்ற தொழிலதிபரைக் கடத்தி அவரை விடுதலை செய்வதற்காக பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதிதான் அன்சாரியால் பின்னர் உமர் ஷெய்க்கிற்கு தரப்பட்டுள்ளது” என்று நீரஜ் குமார் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து டெல்லி காவல்துறை ஆணையர் பொறுப்பில் இருந்தபோது தாம் விசாரணை மேற்கொண்டதாகவும், அப்போது தாவூத் இப்ராகிம் தரப்பிலிருந்து தமக்கு மிரட்டல் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஐபிஎல் சூதாட்டம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தேன். 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் எனது கைபேசிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் பேசியவர், அடுத்த சில மாதங்களில் நான் பணியில் இருந்து ஓய்வு பெறப்போவதைக் குறிப்பிட்டார். ‘பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் உங்களுக்கான பாதுகாப்பு விலக்கப்படும். எனவே கவனமாக நடந்துகொள்ளுங்கள்’ என்று அவர் மிரட்டல் விடுத்தார்.
“என்னை கைபேசி வழி தொடர்புகொண்டது தாவூத் இப்ராகிமாகத் தான் இருக்க வேண்டும். அல்லது அவரது இளைய சகோதரர் அனீஷ் என்னை மிரட்டி இருக்கக்கூடும்” என்று நீரஜ் குமார் மேலும் தெரிவித்துள்ளார்.