Home Featured நாடு மீண்டும் நிகழுமா மோடி- ரஜினி சந்திப்பு? – அதிக எதிர்பார்ப்பில் கோலாலம்பூர்!

மீண்டும் நிகழுமா மோடி- ரஜினி சந்திப்பு? – அதிக எதிர்பார்ப்பில் கோலாலம்பூர்!

925
0
SHARE
Ad

modi-rajiniகோலாலம்பூர் – ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக மலேசியா வரும் மோடி, உலகத் தலைவர்களை சந்திக்க இருப்பது ஒருபுறம் இருக்க, ‘கபாலி’  படப்பிடிப்பிற்காக கடந்த சில வாரங்களாக கோலாலம்பூரில் தங்கி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவர் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சமயத்தில், தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த அவர், ஜெயலலிதா, கருணாநிதியைத் தாண்டி அதிக முனைப்புடன் சந்திக்க விரும்பியது ரஜினியைத் தான். பிரதமர் வேட்பாளர் என்பதையும் பொருட்படுத்தாது நேரடியாக ரஜினியின் இல்லத்திற்கே சென்று சந்திக்கும் அளவிற்கு இருவரின் நட்பும் இருந்தது.

இருவரும் அதன் பிறகு அவ்வளவு நெருக்கமாக சந்தித்து பேசிக் கொள்ளவில்லை என்றாலும், தங்கள் நெருங்கிய வட்டாரங்களின் மூலம் தொடர்பிலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில், கோலாலம்பூரில் மோடி, ரஜினியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருவேளை இருவரின் சந்திப்பு நிகழ்ந்தால், பரஸ்பர நட்பைத் தாண்டி, கண்டிப்பாக அரசியல் தொடர்பான பேச்சுக்கள் எழாமல் இருக்க வாய்ப்பில்லை.

#TamilSchoolmychoice

அதற்கு காரணம் ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கும் 2016 சட்டமன்ற தேர்தல் தான். எப்போதும் அரசியலைச் சுற்றி ரஜினியோ, ரஜினியின் பெயரைச் சுற்றி அரசியலோ இல்லாமல் இருந்ததில்லை. குறிப்பாக ஒவ்வொரு தேர்தலின் போதும் இது தொடர் கதையாகிறது.

இந்நிலையில், பீகார் தேர்தலில் பலத்த சேதாரத்தை சந்தித்த பாஜக, தமிழகத்தில் குறைந்த தனது இருப்பையாவது நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

திமுக-அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளைத் தாண்டி மோடியின் செல்வாக்கு தமிழகத்தில் நிலைப்பெற வேண்டுமானால், இங்கு பெரும் செல்வாக்கு பெற்ற ஒருவர் அவருடன் கை கோர்க்க வேண்டும். அந்த ஒருவர் ஒருவேளை ரஜினியாக இருந்தால், பாஜக-விற்கு ஆகச் சிறந்த தேர்தலாக 2016 அமையும். எனினும், இதற்கு ரஜினி ஒப்புக்கொள்வாரா? என்பதெல்லாம் வேறு கதை.

இதற்கிடையே ரஜினியுடனான மோடியின் சந்திப்பு நிகழாமல் போவதற்கான வாய்ப்புகளும் உள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. அதற்கு காரணம், ரஜினியின் புகழ் தான்.

மலேசியாவில் ரஜினிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு ரஜினி ரசிகனிடத்தில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்குமோ? அதற்கு சிறிதும் குறைவில்லாமல் மலேசியாவிலும் அவருக்கு கிடைத்து வருவது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

ரஜினி கோலாலம்பூருக்கு வந்திறங்கிய நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும், நட்பு ஊடகங்களில் தவறாமல் இடம்பெற்று வருகின்றது அவரது புகைப்படம். மலேசியாவிலுள்ள உயர்மட்டத்தில் உள்ளவர்கள் முதல் கடைக்கோடி ரசிகன் வரை அனைவரிடத்திலும் ஒரே போன்ற புன்னகையையும், நன்றியையும் காண்பித்து படம் எடுத்து வருவது ரஜினிக்கே உரிய பண்பு.

ரஜினியைச் சுற்றியுள்ள ரசிகர்களின் ஆரவாரம், மோடி சந்திப்பின் போது மோடியைத் தாண்டி, தொடரும்பட்சத்தில் இது இருவருக்கும் தேவையில்லாத அசெளகரியத்தை ஏற்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் பொதுவெளியில் இருவரின் சந்திப்பும் நிகழுமானால் தற்போது இருக்கும் பாதுகாப்பு நெருக்கடிகளை விட பலமடங்கு கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் இத்தகைய பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இருவரும் சந்திப்பினை தவிர்க்கலாம்.

எனினும், பொது வாழ்வில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் மோடியும், சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினியும் சந்திக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பிற்கான விடை இன்னும் இரண்டு தினங்களில் தெரிந்துவிடும்.

– சுரேஷ்