கோலாலம்பூர் – ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று மலேசியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நஜிப்புடனான சந்திப்பில் ஏற்படவிருக்கும் தர்மசங்கடமான சூழலை எப்படிக் கையாளப்போகிறார் என்பது தான் உலகளவில் அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து மலேசியப் பிரதமர் நஜிப்புடன் கலந்தாலோசிக்கவிருக்கும் ஒபாமா, 1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அவரிடம் அதன் நிலவரம் குறித்தும் கேட்க வேண்டிய நிலையில் உள்ளார் என்று தெரிவித்துள்ளது.
மலேசியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜான் மல்லாட் கூறுகையில், இது ஒரு நெருக்கடியான சூழல். ஒபாமா சற்று விலகியிருக்க வேண்டிய நிலையில் உள்ளார் காரணம் நஜிப் தற்போது கறைபடிந்துள்ள ஒரு தலைவர் என்று தெரிவித்துள்ளார்.
இன்று இரவு நஜிப்புடன் ஒபாமா தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை மேற்கொள்வார் என்றும், அப்போது மலேசியாவிலுள்ள அரசியல் எதிரணியின் நிலை மற்றும் ஜனநாயகம் தொடர்பான மற்ற விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்புவார் என்று வெள்ளை மாளிகையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் தெரிவித்துள்ளது.