கோலாலம்பூர் – இன்று காலை உலகின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவரான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தங்களின் வட்டாரத்திற்கு வந்து விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை தலைநகர், செந்துல் வட்டார வாசிகள் அறிந்திருக்கமாட்டார்கள்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஒபாமாவுக்கு குறுகிய காலத்தில் இது இரண்டாவது மலேசிய வருகையாகும். ஆசியான் உச்சநிலை மாநாடு, உலகின் மிகப் பெரிய நாடுகளின் தலைவர்களுடன் சந்திப்பு – இவற்றுக்கிடையில் தனது மனிதாபிமானத்தைக் காட்டும் சில வருகைகளையும் ஒபாமா இன்று மேற்கொண்டார்.
சிறுமி ஒருத்தியுடன் அளவளாவி மகிழும் ஒபாமா…
இன்று சனிக்கிழமை காலை 11.10 மணியளவில் செந்துல் வட்டாரத்திற்கு வந்த ஒபாமா, அங்கு அகதிகள் மற்றும் நகர்ப்புற ஏழைக் குழந்தைகளுக்கான கல்வி போதிக்கும் அறக்கட்டளை மையம் ஒன்றுக்கு வருகை தந்தார்.
அமெரிக்க அதிபருக்கே உரிய வழக்கமான பாதுகாப்பு, மரியாதைகளை பின்பற்றாமல், குழந்தைகளோடு ஒருவராக அவர்களுடன் அமர்ந்த ஒபாமா அவர்களுடன் அளவளாவினார். அந்தக் குழந்தைகளில் சிலர் மியன்மார், மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
அந்தக் குழந்தைகள் ஆர்வத்துடன் தங்களின் ஓவியம், விஞ்ஞானப் பாடங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அவர்களின் பள்ளிப் பாடங்களை ஒபாமா பார்த்து ரசித்தார்.
அந்தக் குழந்தைகளைப் பார்த்து எல்லோரும் எப்படியிருக்கிறீர்கள் என உற்சாகமாகக் கேட்ட ஒபாமா என்ற நபர், எத்தனை சக்தி வாய்ந்த ஒரு தலைவர் என்பது அந்தக் குழந்தைகளுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குழந்தைகளோடு குழந்தையாக தரையில் அமர்ந்து அவர்களின் பள்ளிப் பாடங்களை இரசிக்கும் ஒபாமா…
டிக்னிடி ஃபோர் சில்ட்ரன் அறக்கட்டளை (The Dignity for Children Foundation) என்ற அந்த அறக்கட்டளை, 15 ஆண்டுகளுக்கு முன்பு செந்துல் வட்டாரத்தில் வசிக்கும் ஏழ்மைக் குடும்பக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக ரெவரெண்ட் எலிஷா சட்விண்டர் மற்றும் அவரது மனைவி பெட்ரினா ஆகியோரால் தொடங்கப்பட்டதாகும்.
இவர்களிடம் உரையாடிய ஒபாமா இந்த மையத்தை நடத்துவதில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இன்று, 2க்கும் 17க்கும் இடைப்பட்ட, சுமார் 1,000 குழந்தைகளுக்கு தரமான கல்வியை, சிறப்பான சூழ்நிலையில் வழங்கும் மையமாக இந்த அறக்கட்டளை விளங்குகின்றது.
இங்கு ஒபாமா இன்று சுமார் ஒரு மணி நேரம் தங்கியிருந்து இந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தார்.
-செல்லியல் தொகுப்பு