Home Featured நாடு “இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது, அதைப் பார்க்க வாருங்கள்”: உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு

“இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது, அதைப் பார்க்க வாருங்கள்”: உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு

694
0
SHARE
Ad

கோலாலம்பூர்- உலகப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை சிறப்பாக இல்லையென்றாலும், இந்திய பொருளாதாரம் சீராக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவில் வீசும் காற்று தற்போது மாறிவிட்டது என்றும், தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட கொள்கை மாற்றங்களே நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்றும் கூறினார்.

Narendra Modi-asean-KLஇன்றைய ஆசியான் மாநாட்டில் உரையாற்றும் நரேந்திர மோடி

#TamilSchoolmychoice

ஆசியான் அமைப்பிலுள்ள பல நாடுகள், இந்த வட்டாரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய பங்களிப்பை தர வேண்டியது தற்போது இந்தியாவின் முறை என்றார் மோடி.

“எங்களுக்கான காலம் வந்துள்ளதாக நாங்கள் உணர்கிறோம். இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது. அதை பார்க்க உங்கள் எல்லோரையும் அழைக்கிறேன். காற்றானது, எல்லைகளைக் கடந்து வீச சற்று காலம் பிடிக்கும். எனவேதான் உங்களை நான் அழைக்கிறேன்,” என்றார் மோடி.

இந்தியாவில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதாக பெருமையுடன் குறிப்பிட்ட அவர், கடந்த 65 ஆண்டுகால பாரம்பரியத்தை மாற்றி, நாட்டின் வெளியுறவு கொள்கையை வகுப்பதில் இந்திய மாநிலங்களையும் பங்காளிகளாகச் சேர்த்துள்ளதாகக் கூறினார்.

ASEAN-27th -Leaders-group photoஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுடன் மோடி…

முதலீட்டாளர்களின் நட்பு நாடாக இந்தியா தற்போது உருப்பெற்றுள்ளதாகவும், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் இதற்கு வெகுவாகக் கைகொடுத்திருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அறிவுசார் சொத்துரிமை, உரிமம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்து, விலைவாசி குறையத் தொடங்கியுள்ளது என்றார்.
“சீர்திருத்தம் என்பது ஒரு நீண்ட பயணத்தின் நடுவே வரும் நிறுத்தங்கள் போன்றவை. அந்தப் பயணத்தின் முடிவு என்பது, இந்தியாவை முற்றிலுமாக மாற்றியமைப்பதாக இருக்க வேண்டும். 21ஆவது நூற்றாண்டு ஆசியாவுக்கான நூற்றாண்டு. ஆசிய நாடுகள் அனைத்துமே சிறப்பாக செயல்பட்டு வருவது ஆசியான் நடவடிக்கைகளை ஆய்வு செய்து பார்த்தால் தெரியும்” என்று கூறினார்.

இந்தியாவும், ஆசியான் நாடுகளும் இயல்பான கூட்டாளிகள் என்று குறிப்பிட்ட அவர், இந்த கூட்டாளித்துவம் வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்று தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது உலக நாடுகளின் வர்த்தகம் குறைந்துவிட்டாலும், இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் 4.65 விழுக்காடு சராசரி வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும், துறைமுக போக்குவரத்து 11.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் மோடி மேலும் சுட்டிக்காட்டினார்.