Home Featured நாடு “மலேசிய நிலவரம் என்ன?” – சமூக இயக்கப் பிரதிநிதிகளுடன் ஒபாமா சந்தித்துக் கேட்டறிந்தார்!

“மலேசிய நிலவரம் என்ன?” – சமூக இயக்கப் பிரதிநிதிகளுடன் ஒபாமா சந்தித்துக் கேட்டறிந்தார்!

572
0
SHARE
Ad

Obama-asean-meet-KL civic groupsகோலாலம்பூர் – தனது மலேசிய வருகையின் ஒரு பகுதியாக இன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மலேசியாவின் குறிப்பிடத்தக்க சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் சிலரைச் சந்தித்து மலேசிய நிலவரங்கள் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார்.

8 இயக்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் சார்பாக அதன் தலைவர் ஸ்டீவன் திரு, பெர்சே இயக்கத்தின் சார்பில் டத்தோ அம்பிகா சீனிவாசன் மற்றும் மரியா சின் ஆகியோர் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மலேசிய கினி இணைய செய்தித் தளத்தின் சார்பில் அதன் தலைமைச் செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரனும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை தனித்துவம் மிக்க, துணிச்சல் மிகுந்த ஆண்மகன்கள், பெண்மணிகள் என புகழாரம் சூட்டிய ஒபாமா, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்களை அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்

“நாள்தோறும் அவர்கள் மேற்கொண்டு வரும் முக்கியமான பணிகளின் பின்னால் அமெரிக்கா உறுதுணையாக நிற்கின்றது என்ற தெளிவான செய்தியை இந்த சந்திப்பின் மூலம் நான் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்” என்றும் ஒபாமா கூறியுள்ளார்.

“அடிப்படையான உலகமய சித்தாந்தங்களான பத்திரிக்கைச் சுதந்திரம், மத சுதந்திரம், கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம் போன்றவற்றின் மீது எங்களுக்குள்ள நம்பிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்.அதன் மூலம் நாடுகள் மேலும் வலிமையானதாகவே வளர்ச்சி பெற முடியும்” என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

Obama-speak-asean-summitஆசியான் மாநாட்டில் இன்று உரையாற்றிய ஒபாமா…

மலேசியாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதை ஒப்புக் கொண்ட ஒபாமா, இந்தப் பிரச்சனை, நடப்பில் அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் இருக்கும் பொருளாதார உறவுகளோடு சமன்படுத்தப்பட்டுப் பார்க்க வேண்டும் என்று கூறியதாக இந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நேற்று நஜிப்புடன் நடத்திய சந்திப்பின் போது, மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மீறல்கள் குறித்து தான் நஜிப்பிடம் தெரிவித்துள்ளதாகவும் ஒபாமா இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது ஜனநாயக உரிமை மீறல்களோடு, அன்வார் இப்ராகிம் மீது விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை குறித்த விவகாரமும் எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் இந்த சந்திப்புக் கூட்டத்தில் பேசப்பட்டது.

கடந்த ஏப்ரலில் ஒபாமா மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டபோது நடத்தப்பட்ட இதே போன்ற சந்திப்பின் போது எழுப்பப்பட்ட நிலவரங்கள் தற்போது மேலும் மோசமான நிலைமையையே அடைந்துள்ளதாக ஒபாமாவிடம் தான் தெரிவித்துள்ளதாக அம்பிகா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நஜிப்புக்கு வழங்கப்பட்ட 2.6 பில்லியன் மலேசிய ரிங்கிட் நன்கொடை குறித்த விவகாரமும் ஒபாமாவின் பார்வைக்கு இந்த சந்திப்பின் கூட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. சில அரசு அமைப்புகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள், சட்டத்தைக் கொண்டு அடக்குமுறைகள், எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைத்து அரசாங்கம் வழக்கு தொடுப்பது, டிபிபிஏ எனப்படும் பசிபிக் வட்டார கூட்டமைப்பு உடன்படிக்கை ஆகிய விவகாரங்களும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளன.

-செல்லியல் தொகுப்பு