கோலாலம்பூர் – இன்று மாலை ஸ்ரீகம்பாங்கானில் உள்ள மைன்ஸ் கண்காட்சி மண்டபத்தில் இந்திய வம்சாவளியினருடனான பொதுக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், பயங்கரவாத செயல்களில் மதத்தை தொடர்புபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
“இன்று உலக அளவில் தீவிரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதற்கு எல்லையே இல்லை. அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது. பயங்கரவாதத்துடன் மதத்தை தொடர்புபடுத்துவதை நிறுத்த வேண்டும். மனிதநேயத்தை நம்புகின்றவர்கள், நம்பாதவர்கள் இவர்களுக்கு இடையில் தான் வேறுபாடு உள்ளது.” என்று மோடி குறிப்பிட்டார்.
பெருமைப்படும் வகையில் மலேசியா
மலேசியாவின் சாதனைகள் மகத்தானது என்று தெரிவித்த மோடி, சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் மலேசியா பெருமைப்படும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர்கள் எப்போதும் தன் மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட மோடி, தான் பதவியில் இல்லாத போது வந்த போதும், இப்போது பிரதமராக வரும் போதும் அதே அன்பை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார். எனவே மலேசிய இந்தியர்களின் மீது தனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு என்றும் மோடி தெரிவித்தார்.
அதேபோல், பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து மலேசியா வந்த இந்தியர்கள் இன்று வரை இந்தியா மீதும் அதே அளவு பாசம் கொண்டிருப்பதையும் மோடி சுட்டிக் காட்டினார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் ஐஎன்ஏ இயக்கம் வலுப்பெற மலேசிய இந்தியர்கள் மிகவும் உறுதுணையாக இருந்ததாக மோடி தெரிவித்தார்.
அதற்காக இந்தியா என்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சிப் பாதையில் இந்தியா
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருவதாக மோடி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அதன் வளர்ச்சியை எண்ணி நிச்சயம் பெருமைப்படுவீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது 7.5 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியடைந்து வரும் இந்தியா, அடுத்த சில வருடங்களில் இன்னும் அதிகமான வளர்ச்சியை அடையும் என்றும் உறுதியளித்தார்.
இந்திய அரசாங்கம் முற்றிலும் தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளப் போவதாகவும், எல்லா நிலைகளிலும் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாக மோடி தனது உரையில், மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பொன்மொழியான, இளைஞர்கள் வித்தியாசமான சிந்தனையும், புதியவற்றை உருவாக்கும், ஆராய்ந்து பார்க்கும் மனநிலையையும் பெறும் தைரியம் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.