புத்ரா ஜெயா – மலேசிய வருகை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புத்ரா ஜெயா வருகை தந்து பிரதமர் நஜிப் துன் ரசாக்கைச் சந்தித்து அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் நடத்தியதில் பல முக்கிய உடன்பாடுகள் காணப்பட்டுள்ளன.
புத்ராஜெயாவுக்கு வருகை தந்த மோடிக்கு இராணுவ மரியாதையுடன் அதிகாரபூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
நரேந்திர மோடிக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு நல்கப்படுகின்றது
இராணுவ மரியாதை முடிந்தவுடன் தனது அலுவலகத்திற்கு மோடியை அழைத்துச் சென்ற பிரதமர் பின்னர் மோடியுடன் நடத்திய சந்திப்பில், மோடியின் உடன் செல்லும் அமைச்சரான டாக்டர் சுப்ரமணியம், மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மோடியை புத்ரா ஜெயா வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் டாக்டர் சுப்ரா…
மோடியை வரவேற்று தனது அலுவலகம் அழைத்துச் செல்லும் நஜிப்….
மோடியை அழைத்துச் செல்லும் நஜிப் – டாக்டர் சுப்ரா
நஜிப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இந்தியா மிகப் பிரம்மாண்டமான உட்கட்டமைப்பு, மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவிருக்கின்றது என்றும் அதில் பங்கு பெற மலேசியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.
“புதிய உட்கட்டமைப்பு மேம்பாடுகள், இரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், விவேக நகர் (smart cities) உருவாக்கங்கள், மறுபயனீட்டு சக்தி போன்ற துறைகளில் மோடி மிகப் பெரிய திட்டங்களைக் கொண்டிருக்கின்றார்” என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்தில் மோடியை வரவேற்கும் நஜிப் – உடன் டாக்டர் சுப்ரா, டத்தோஸ்ரீ சாமிவேலு….
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மாநாட்டு மண்டபம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு இரு நாட்டு அரசாங்கங்கங்களின் சார்பில் உடன்படிக்கை காணப்பட மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
“மோடி ஒரு செயல்வீரர். திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்படுவதில் அவர் ஆர்வமாக இருக்கின்றார்” என்றும் நஜிப் மோடிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மோடி-நஜிப் அதிகாரபூர்வ சந்திப்பின்போது கலந்து கொண்ட மற்ற அமைச்சர்கள், உயர் அதிகாரிகள்…
இந்தியாவின் பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் பட்டங்களை மேலும் கூடுதலான அளவில் அங்கீகரிக்கவும், குறிப்பாக இந்தியப் பல்கலைக் கழகங்களின் பொறியியல் துறை பட்டங்களை அங்கீகரிக்கவும் தாம் கொள்கையளவில் இணங்கியுள்ளதாகவும், தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சுகள் இதுகுறித்த நடவடிக்கைகளில் இறங்கும் என்றும் நஜிப் தெரிவித்தார்.
இதன் மூலம், தொழில்நுட்ப உயர்கல்வியை மேலும் அதிகமான மாணவர்கள் இந்தியாவில் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
தற்காப்புத் துறையில் சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள இந்தியாவுடன் இணைந்து தற்காப்பு, மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஈடுபடவும் மலேசியா கவனம் செலுத்தும் என்றும் நஜிப் கூறியிருக்கின்றார்.
இதே நிகழ்வில் உரையாற்றிய மோடி மலேசியாவின் சாதனைகளைப் பாராட்டினார். மலேசியா ஏர்லைன்ஸ் தொடர்பில் ஏற்பட்ட இரண்டு பேரிடர்களைச் சந்தித்து அதில் பொறுமையுடன் செயல்பட்ட மலேசியர்களை மோடி பாராட்டினார்.
நஜிப்பின் தலைமைத்துவத்தையும் பாராட்டிய மோடி, இந்தியாவின் உட்கட்டமைப்புத் திட்டங்களில் பங்குபெற வருமாறு மலேசிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
“உட்கட்டமைப்புத் திட்ட நிறைவேற்றங்களைப் பொறுத்தவரை மலேசியாவின் ஆற்றல் அனைவரும் அறிந்ததுதான். இந்தியாவிலும் பல பெரிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மலேசிய நிறுவனங்கள் சிறப்பான முறையில் நிறைவேற்றியுள்ளன” என்றும் மோடி பாராட்டு தெரிவித்தார்.
நேற்று காலை புத்ரா ஜெயாவில் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் இரு தலைவர்களும் அங்கிருந்து புறப்பட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியில் அலங்காரத் தோரண வாயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்தனர்.
-செல்லியல் தொகுப்பு