சென்னை – தமிழகத்தை காலம் காலமாக ஆண்டு வரும் திமுகவும், அதிமுகவும் தங்களை ஜனநாயகக் கட்சிகளாக காட்டிக் கொண்டாலும், ஜனநாயகத்தை முற்றிலும் மழுங்கடித்து, ஒரு குறிப்பிட்ட தலைமையின் வம்சாவளி மட்டும் தலைமை பொறுப்பைத் தொடர்வதும் அல்லது அடுத்த கட்டத் தலைவர்களே இல்லாமல் ஒற்றைத் தலைமையை நம்பிக் கொண்டு செயல்படுவதுமாக தோன்றுவது எனக்கு(ம்) தானா? என்பது தெரியவில்லை.
அத்தகைய எண்ணத்திற்கான காரணங்களும், இந்த கேள்விக்கான நியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு தலைவனின் ஆகச் சிறந்த பண்பே தனக்கு அடுத்து, சிறந்த தலைமைக்கான அடித்தளத்தை விட்டு செல்வது தான். அதனை இரு பெரும் கட்சிகளின் ஆரம்பக் கட்டத் தலைவர்கள், விதி வசத்தாலோ அல்லது தன்முனைப்புடனோ செய்துவிட்டுச் சென்றுள்ளனர். அப்படி உருவானவர்கள் தான் கருணாநிதியும், ஜெயலலிதாவும். இருவரும் தற்போது வயோதிகத்தை எட்டிவிட்டத்தை அடிக்கோடிட்டு காட்டத் தேவையில்லை.
இன்றைய நிலையில் தமிழகத்திற்கு தேவையான தலைமை, இளைமையும், முதிய அனுபவமும் ஒரு சேர கலந்தவராக இருக்க வேண்டும். அதற்குத் தான் நாங்கள் ஸ்டாலினை களமிறக்கி உள்ளோமே என்று திமுக-வினர் கூறலாம். ஆனால், ஸ்டாலின் திமுகவில் சமபலத்துடன் உள்ள எத்தனை பேருடன் முட்டிமோதி, போட்டியிட்டு ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்றார் என்ற கேள்வியை திமுக வசமே வைத்து விடலாம்.
கருணாநிதி தலைவராவதற்கு நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வெ.கி. சம்பத், எம்ஜிஆர் என பலருடன் போட்டி போட வேண்டி இருந்தது. கட்சிக்குள்ளேயே மிகப் பெரிய போட்டியிட்டு தான் கருணாநிதி வெற்றி பெற்றார். ஆனால் தான் பட்ட கஷ்டங்களை தன் மகன் படக்கூடாது என்பதற்காக ஆரம்பம் முதலே தலைமைக்கான போட்டியை முனைப்புடன் தவிர்த்துவிட்டார் போல.
ஸ்டாலினின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே, திமுகவில் அவ்வபோது தலைமைக்கான பண்புடன் எட்டிப் பார்த்த ஒரு சிலர் அடியோடு கட்சியை விட்டு ஓரங்கட்டப்பட்டனர் என்ற தகவல்கள் பலமுறை நம் காதுகளுக்கு எட்டி உள்ளன. அப்படிப்பட்டவர்களில் முக்கியமான ஒருவர் மதிமுக தலைவர் வைகோ.
இப்படியாக திமுக ஒருபுறம் வாரிசு அரசியலைக் கையாண்டால், அதிமுகவின் நிலை அதை விட பரிதாபமாக இருக்கிறது. ஸ்டாலின் தமிழகத்தை காப்பாற்றுவாரா? இல்லையா? என்பதில் கலவையான கருத்துக்கள் இருந்தாலும், திமுகவை, கருணாநிதிக்கு அடுத்து, கட்டாயம் காப்பாற்றுவார் என்பதில் யாருக்கும் குழப்பமே இருக்காது. ஆனால் அதிமுகவிற்கு அப்படியில்லை. அதிமுகவின் ஆகச் சிறந்த பலமும், ஆகச் சிறந்த பலவீனமும் ஒருவரே தான். அவர் தான் ஜெயலலிதா.
எம்ஜிஆரின் மறைவிற்குப் பின்னர் பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும் அனைத்தையும் உடைத்தெறிந்து, கட்சிப் பிளவுகளை தவிடுபொடியாக்கி தலைமை இடத்தை பிடித்த ஜெயலலிதா, ஏன் தன் கட்சியில் அடுத்த கட்டத்திற்கான தலைமையை வளர்க்க வில்லை? என்பது புரியாத புதிர் தான்.
ஜெயலலிதா செயலற்று போனால் அதிமுக என்னவாகும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான், சொத்துக் குவிப்பு வழக்கும், அதனைத் தொடர்ந்து வந்த நீதிமன்றத் தீர்ப்பும். அந்த சூழலில் அதிமுக ஆட்சியில் இருந்ததால் தமிழகமும், ஜெயலலிதா தலைமையில் இருந்ததால் அதிமுகவும் ஒருசேர ஸ்தம்பித்தது.
இப்படியாக இருபெரும் திராவிடக் கட்சிகளின் தலைமைகளும் திட்டமிட்டே அடுத்தகட்டத் தலைவர்களை உருவாக்கத் தயங்குவதும், யாரோ ஒரு தன்னலமற்ற தலைவன் உருவாகி விடமாட்டானா? என மக்கள் ஏங்குவதும் தமிழகத்தில் தொடரும் அவலம் தான்.
– சுரேஷ்