Home Featured உலகம் நரேந்திர மோடி வழங்கவிருக்கும் ‘சிங்கப்பூர் விரிவுரை’ என்பது என்ன?

நரேந்திர மோடி வழங்கவிருக்கும் ‘சிங்கப்பூர் விரிவுரை’ என்பது என்ன?

804
0
SHARE
Ad

சிங்கப்பூர் – இன்று சிங்கப்பூர் வந்தடைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றே ‘சிங்கப்பூர் விரிவுரை’ வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் லெக்சர் எனப்படும் சிங்கப்பூர் விரிவுரை என்பது உலகப் புகழ்பெற்ற தலைவர்கள், நிபுணர்களின் பேருரைகளின் தொடர் வரிசையாகும். இந்த வரிசையில் இன்று 37வது தொடர் உரையை மோடி வழங்கவிருக்கின்றார்.

“இந்தியாவின் சிங்கப்பூர் கதை” (India’s Singapore Story) என்பது மோடி வழங்கவிருக்கும் உரையின் தலைப்பாகும்.

#TamilSchoolmychoice

Modi-Singapore lecture-“சிங்கப்பூர் விரிவுரை” வழங்கும் நரேந்திர மோடி

சிங்கப்பூர் ஷங்ரிலா தங்கும் விடுதியில் நடைபெறும் மோடியின் இந்த உரை நிகழ்ச்சிக்கு, சிங்கைத் துணைப் பிரதமரும், சிங்கப்பூருக்கான பொருளாதார, சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் தலைமை தாங்குவார்.

சிங்கப்பூரின் உயரிய அறிவாற்றல் மற்றும் திறன்களின் முகமாக இந்த சிங்கப்பூர் விரிவுரை நிகழ்ச்சி கருதப்படுகின்றது. உலகின் பல முக்கியத் தலைவர்களும், நிபுணர்களும் இந்த சிங்கப்பூர் உரைகளை இதுவரை வழங்கி உள்ளனர்.

இந்த விரிவுரை நிகழ்ச்சிகளை நடத்துவது சிங்கப்பூரின் தென்கிழக்காசிய கல்வி ஆய்வு மையமாகும் (The Institute of Southeast Asian Studies -ISEAS). 1968ஆம் ஆண்டில் ஒரு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு மையம், கடந்த ஆகஸ்ட் 2015 முதல் யூசுப் இஷாக் கல்வி நிலையம் (ISEAS – Yusof Ishak Institute) எனப் பெயர் மாற்றம் கண்டது.

யூசுப் இஷாக் (Yusof Ishak) சிங்கப்பூரின் முன்னோடி அரசியல் தலைவர்களில் ஒருவராவார். சிங்கையின் முதல் அதிபராக இவர் 1965 முதல் 1970 வரை பதவி வகித்தார். அவரது நினைவாகவே இந்த கல்வி ஆய்வு மையம் பெயர் மாற்றம் கண்டது.

இந்த ஆய்வு மையத்தின் சார்பாக நடத்தப்பட்டும் ‘சிங்கப்பூர் விரிவுரை’ என்னும் நிகழ்ச்சியில்தான் மோடி கலந்து கொண்டு இன்று உரையாற்றவிருக்கின்றார்.