கோலாலம்பூர் – “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்ற பிரபலமான வாசகத்தை ‘சூரியன்’ என்ற படத்தில் அடிக்கடி உதிர்ப்பார் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. எந்த நேரத்தில் அப்படிச் சொன்னாரோ, இன்றைக்கு அதுவே எல்லா அரசியல் ஆச்சரியங்களுக்கும், அதிர்ச்சி மாற்றங்களுக்கும், தாரக மந்திரமாக அமைந்து விட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் கூடிய ‘பழனிவேல் தரப்பினர்’ என்று கூறிக் கொள்ளும் மஇகாவின் ஓர் பிரிவினர், தங்கள் கூட்டத்தில் எடுத்த அதிரடியான சில முடிவுகளில் தலையாய முடிவாக – அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் முடிவாக அமைந்தது – ‘பழனிவேலுவின் தலைமையே இனி வேண்டாம்! அவரையே தூக்கியெறிவோம்’ என்ற முடிவுதான்.
இதைக் கேட்டதும் நமது நினைவுக்கு வருவதும் கவுண்டமணியின் மேற்கண்ட வாசகம்தான்!
பழனிவேலுவின் தலைமைத்துவத்தை தூக்கியெறிந்தது ஏன்?
மஇகாவின் தலைமைத்துவப் போராட்டம் கடந்த ஓராண்டாக நடந்து கொண்டிருந்த வேளையில் பழனிவேலுவின் தலைமையின் கீழ் பல முக்கியத் தலைவர்களும், பல மஇகா கிளைகளும் ஒன்றிணைந்து ஓரணியாகச் செயல்பட்டு வந்தார்கள்.
அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (20 நவம்பர் 2015) கோலாலம்பூரில் ‘2009 இடைக்கால மத்திய செயலவைக் கூட்டம்” என்ற பெயரில் கூடி, சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்கள். அதன்படி, தங்களின் அணியினர் வலுவிழந்து, நடந்த அரசியல் போராட்டத்தில் நிலைகுலைந்து போனதற்கான காரணம், பழனிவேலுவின் மோசமான தலைமைத்துவம்தான் எனக் குற்றம் சாட்டிய அவர்கள் அதன் காரணமாக இனி பழனிவேல் தலைமையே வேண்டாம் என அதிரடியாக முடிவெடுத்துள்ளார்கள்.
அன்றைய கூட்டத்தில் பழனிவேலு கலந்து கொள்ளவில்லை.
இனி, தங்களின் அணியினருக்கு டத்தோ எஸ்.சோதிநாதனும், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணனும் தலைமையேற்று வழி நடத்தி வருவார்கள் என்றும் அவர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.
சோதிநாதன் பிரதமர் நஜிப் இடையிலான சந்திப்பு
பழனிவேல் தரப்பு என்று கூறி வந்த இந்தப் பிரிவினரின் இந்த அதிரடியான முடிவுகளுக்குக் காரணம், கடந்த நவம்பர் 2ஆம் தேதி சோதிநாதன் நஜிப்புடன் நடத்திய சந்திப்புதான் என இந்தத் தரப்பினரின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நஜிப்பைச் சந்தித்த சோதிநாதன் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்ததாகவும், ஆனால் அதற்கு பதிலடியாக, நஜிப், பழனிவேலுவை மீண்டும் மஇகாவுக்குள்ளோ, தேசிய முன்னணிக்குள்ளோ அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார் என்றும் கூறப்படுகின்றது. பழனிவேலுவைத்தான் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது, மாறாக மற்ற மஇகாவினரை தேசிய முன்னணியுடனோ, மஇகாவுடனோ இணைத்துக் கொள்வதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிரதமருடனான தனது சந்திப்பு குறித்த விவரங்களை சோதிநாதன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கியுள்ளார்.
நஜிப் சோதிநாதனைச் சந்தித்தபோது மறுநாள் தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னானைச் சந்தியுங்கள் என்று ஆலோசனை கூறினார் என்றும் அதன்படி சோதிநாதன் நவம்பர் 3ஆம் தேதி தெங்கு அட்னானைச் சந்தித்தார் என்றும் அந்தத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இரண்டு சந்திப்புகளின் எதிரொலியாகத்தான் பழனிவேலுவின் தலைமையையே தூக்கியெறிய இந்தக் குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
பேச்சு வார்த்தை நடத்த குழுவினர் நியமனம்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் முடிவின்படி, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்துடன் சுமுகமான மறு-இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பத்து தொகுதி தலைவர் ஏ.கே.இராமலிங்கம், முன்னாள் தலைமைச் செயலாளர்கள் குமார் அம்மான், வழக்கறிஞர் டத்தோ எஸ்.முருகேசன், முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் சிவசுப்ரமணியம், காஜாங் கலை என்ற கலைச்செல்வன், ஆகியோரே அந்த ஐவராவர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகளின்படி மேற்கண்ட ஐவரும் கீழ்க்காணும் அம்சங்களை தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்:-
- அண்மையில் நடந்து முடிந்த மறுதேர்தல்களில் பங்கு பெற இயலாத மஇகா கிளைகள் தங்களின் சந்தாக்களைச் செலுத்தி விட்டு மீண்டும் முழு உரிமைகளுடன் கட்சியில் இணைய வாய்ப்பு தரப்பட வேண்டும்.
- இந்த கிளைகள் தங்களின் சந்தாக்களைச் செலுத்துவதற்கு எதிர்வரும் ஜனவரி 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும். தற்போதைய நடைமுறையின்படி சந்தாக்களைச் செலுத்துவதற்கான இறுதி நாள் டிசம்பர் 15ஆம் தேதி ஆகும்.
- மறுதேர்தல்களில் பங்கு பெறாத மஇகா கிளைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் மீண்டும் கட்சிக்குள் முழு உறுப்பிய உரிமைகளுடன் அனுமதிக்கப்பட வேண்டும்.
- மஇகா அமைப்புவிதிகளுக்கு ஏற்ப மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சித் தேர்தல்கள் 2016ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டும்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் முடிவுளை வைத்துப் பார்க்கும்போது, பழனிவேல் தலைமையை தூக்கியெறிந்து விட்டு, அவரது அணியினர் மீண்டும் மஇகாவுக்குத் திரும்பி, நடப்பு தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியத்தின் தலைமையை ஏற்று செயல்பட முடிவு செய்துள்ளார்கள் என மஇகா அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்.
இருப்பினும், இது குறித்து, டாக்டர் சுப்ரமணியத்தோடு இந்தக் குழுவினர் இதுவரை சந்திப்பு எதனையும் நடத்தவில்லை என்றும் இருப்பினும், அவர்களைச் சந்திக்கவும், மேற்கொண்டு பேச்சு வார்த்தை நடத்தவும் டாக்டர் சுப்ரா இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்வரும் நவம்பர் 28ஆம் தேதி, மஇகா மறுதேர்தல்களுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் முதல் மத்திய செயலவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-இரா.முத்தரசன்